திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஜா மீட்பு பணி தாமதம் காரணமாக 60 வயது முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்!
சென்னையில் இருந்து சுமார் 360 கிமி தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருதுறைப்பூண்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது முத்துப்பேட்டை. மீன்பிடிப்பிற்கு பெயர்போன முத்துப்பேட்டை வங்காள விரிகுடாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் காவேரி டெல்டாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த நவம்பர் 15-ஆம் நாள் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டுக்கோட்டையும் ஒன்று,. பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் பல பகுதிகளில் தற்போதும் மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணாக புயலால் வீழ்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று இப்பகுதியில் புயல் தாக்கி வீழ்ந்துக்கிடந்த மின்கம்பத்தின் கம்பியால், அப்பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் விபத்துக்குள்ளாகி பறிதாபமாக பலியாகியுள்ளதாக நம் செய்தி நிலையத்திற்கு கண்ணன் என்பவர் தெரியப்படுத்தினார். முழுவிவரம் அறிந்துக்கொள்ள இச்சம்பவத்தில் பலியான திருநாவுக்கரசரின் உறவினர் சுரேந்தர் அவர்களை நம் செய்தி பிரிவு தொடர்புகொண்டது.
சுரேந்தர் நமக்கு அளித்த விவரங்கள்...
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கள் பகுதியும் ஒன்று, ஆனால் ஆரசாங்கத்தின் பார்வைக்கு மட்டும் தெரியவில்லை. புயல் தாக்கி 9 நாட்கள் ஆகியும் மீட்பு பணிகள் இங்கு சரியாக நடைப்பெறவில்லை.
இன்று காலை வேலைநிமித்தமாக வட்டாகுடியில் இருந்து முத்துப்பேட்டை சென்ற திருநாவுக்கரசர்(60), வழியில் தாழ்ந்து கிடந்த மின்கம்பி தாக்கி பலியானார். தனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, மனைவியுடன் தனியே வசித்து வந்தார். இன்று அவர் பரிதாபமாக பலியாகியுள்ள நிலையல் அவரது மனைவி தனிமைப் படுத்தப்பட்டுள்ளார் என வருத்தம் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தகவல்கள் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அதிகாரிகள் திருநாவுக்கரசர் உடலை மீட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுரேந்தர் குறிப்பிட்டார்.
மேலும் தங்களது பகுதியில் இதுவரை மின்சார இணைப்பு திரும்பவில்லை, அதிகாரிகள் ஒருமாதம் வரை ஆகலாம் என காலக்கெடு கொடுத்துள்ளனர், மீட்பு பணியில் மேலும் தாமதம் நீடித்தால் உயிர்பலி தொடரலாம் எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்!
பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு விரைந்து செயல்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கை...