சென்னை: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் பலர் தெரிவித்தனர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் இல்லத்தின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டுவந்து, அவரை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.
அதிமுக தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று புதிய பேரவையை தீபா தொடங்கினார்.
பேரவையின் பெயர், கொடி, நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை நடந்தது.
அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில், பேரவையின் பெயரை எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கருப்பு, சிவப்பு நிறங்களுக்கு நடுவே வெள்ளை நிற வட்ட வடிவில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் செங்கோலை தாங்கிப்பிடித்து இருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட பேரவையின் கொடியையும் தீபா அறிமுகம் செய்துவைத்தார்.
புதிய பேரவை தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கிய தீபாவுக்கு அவருடைய ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினர்.
முன்னதாக ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தன்னுடைய வீட்டில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு தீபா மரியாதை செலுத்தினார். பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அவருடைய சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பேரவையை தொடங்கிய பின்னர் நிருபர்களுக்கு தீபா பேட்டி:-
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளானன்று புதிய பேரவை ஒன்றை தொடங்கியுள்ளேன். இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெற அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுடன் பயணித்து வெற்றியை தேடித்தர வேண்டும்.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நான் இருக்கவேண்டும் என்று கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்துக்கேற்ப, என் பணி இருக்கும்.
எனது தலைமையை ஏற்கும் அதிமுக-வின் உண்மை தொண்டர்களுடன் பயணித்து ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்போம் என்று உறுதிமொழி ஏற்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் எனது பயணத்தை தொடங்கியுள்ளேன்.
தற்போது அரசியலில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் துரோக கூட்டத்திடம் இருந்து தமிழக மக்களை காப்பதற்காக என்னுடைய பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.