சென்னை: வர்தா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்தியக் குழுவினர் இன்று தமிழகம் வருகை தருகின்றனர்.
சென்னையில் கோர தாண்டவம் ஆடிய வர்தா புயல் சீற்றத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மத்திய அரசிடமிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியும், தொடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ.22,500 கோடியும் ஒதுக்கக் கோரி, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் மனுவை அளித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர் பிரவீன் வசிஷ்டா தலைமையில், நிதி, ஊரக வளர்ச்சி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டது.
வர்தா புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்தியக் குழுவினர் இன்று தமிழகம் வரவுள்ளனர். இக்குழு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கலில் விரிவான ஆய்வு செய்யும் என தெரிகிறது.