எதிர்வரும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது!
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கட்சி இணைந்து சந்திக்கிறது. இக்கூட் டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
முன்னதாக மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை சுடசுட துவங்கியுள்ளனர். அந்த வகையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்.
Congress President @RahulGandhi arrives in Chennai airport to a warm welcome. #VanakkamRahulGandhi pic.twitter.com/3WqyOoL3GQ
— Congress (@INCIndia) March 13, 2019
இதற்காக அவர், இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார்.
நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் மாலை 3 மணிக்கு தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவிலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மேலும் இவருடன் இந்த மேடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதுதவிர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ளனர்.