அரசு விடுதிக்குள் ஆட்சியர் திடீர் ‘ரெய்டு’ - வசமாக சிக்கிய வார்டன்.!

அரசு மாணவர் விடுதி காப்பாளரை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 23, 2022, 09:18 PM IST
  • அரசு மாணவர் விடுதிக்கு திடீர் விசிட் அடித்த ஆட்சியர்
  • மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள்
  • அரசு விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
அரசு விடுதிக்குள் ஆட்சியர் திடீர் ‘ரெய்டு’ - வசமாக சிக்கிய வார்டன்.! title=

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மீன்வளத்துறை, கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை சார்பில் பயனாளிகளுக்கு கடற்பாசி விதைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் வந்தார். விழாவில் கலந்துகொண்ட அவரிடம், சில புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அது என்னவெனில், தொண்டியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் முறைகேடு நடப்பதாகவும், அங்குள்ள விடுதி காப்பாளர் முறையாக உணவு வழங்குவதில்லை எனவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதியா?

புகாரைக் கேட்டு, நடவடிக்கை எடுக்கிறேன் என ஆட்சியர் சொல்லாமல், உடனடியாக தொண்டு அரசு மாணவர் விடுதிக்கு திடீர் விசிட் அடித்தார். மாணவர் விடுதிக்குள் புகுந்த ஆட்சியர் சங்கர்லால், விடுதியைச் சுற்றி ஆய்வு மேற்கொண்டார். திடீரென விடுதிக்குள் வந்த ஆட்சியரைக் கண்டு திகிலடைந்த விடுதி வார்டன் சண்முகராஜ் செய்வதறியாது திகைத்தார். அவரிடம் ஆட்சியர் விடுதி நிலவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, விடுதியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் ?, நாள்தோறும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன ?, அரிசி, பருப்பு, காய்கறிகள் எங்கு வாங்கப்படுகின்றன ?, அவற்றின் தரம் என்ன ?, அதன் வரவு செலவு கணக்கு என்ன ? சரமாரி கேள்விகளை முன்வைத்தார். இதில் எந்த கேள்விக்கும் முறையாக பதிலைச் சொல்ல முடியாமல் விடுதி வார்டன் சண்முகராஜ் திக்குமுக்காடினார். இதன்மூலம், வரவு செலவு கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதை உறுதிசெய்தார் ஆட்சியர். உடனடி நடவடிக்கையாக வார்டன் சண்முகராஜை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் சங்கர்லால் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். தங்கள் பகுதி பிரச்சனைகளைப் பொதுமக்கள் கூறியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அதுகுறித்த தகவல் தனக்கு தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | நரிக்குறவர்களின் பகுதிக்கே வந்து கோரிக்கைகளை கேட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News