CM Stalin On Senthil Balaji Issue: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"வழக்கமாக நான் உங்களில் ஒருவன் பதில்கள், மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் குறித்து போகிறேன்.
அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரிதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?.
உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்!
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அதுதொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை. அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5
முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார்.
நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்துவைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 1 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான
பின்னர்தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்!
ஒரே ஸ்கிரிப்ட்... வேறு வேறு மாநிலங்களில் டப்பிங்!
இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023
பாஜகவின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்! கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜகவின் பாணி. அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.
எதிர்கட்சிகள் மீது ஒடுக்குமுறை
சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தைக் கைது செய்ய வேண்டும். இது, மகாராஷ்டிரா!; ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? டெல்லி மாநில அமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய வேண்டும். இது, டெல்லி!; ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு செய்ய நடத்த வேண்டும்! இது, பீகார்!; மேற்கு வங்கத்தில், மமதா பானர்ஜி பாஜகவை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில்
ரெய்டு நடத்த வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை கைது செய்தார்கள்.
அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றிபெற்று, இப்போது துணை முதலமைச்சராகவே ஆகிவிட்டார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தார்கள். தெலங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு! சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு!
உத்தம்புத்திரன் பாஜக!
ஆனால், உத்தரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது 'உத்தமபுத்திரன்' பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத்துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.
பாஜகவை எதிர்க்கிகிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பாஜகவோடு துணை அமைப்புகள் ரெய்டு நடத்திவிட்டார்கள். அப்படி இல்லை என்றால், அதிமுக மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்துவிடுவார்கள்.
3000 ரெய்டுகள்
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112 தான். ஆனால், பாஜக. ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜகவின் எதிர்க்கட்சிக்கார்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.
இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் சேர்ந்த பின்னர் 'புனிதர்கள்' ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட புனிதர்கள் மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அதிமுகவே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான்.
அடிமை அதிமுக
தமிழ்நாட்டில் 'அடிமை' பழனிசாமி தலைமையில் அதிமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பாஜக ஆட்சி நடத்தி உள்ளது. ரெய்டு நடத்தினார்களே, எந்த வழக்கையாவது நடத்தினார்களா? குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? தண்டனை வாங்கித் தந்தார்களா? இல்லையே!
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றன. ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிக்கையை வரிசையாகத் தாக்கல் செய்து கொண்டு இருக்கிறோம். வழக்குப் பதிவு செய்துகொண்டு இருக்கிறோம். இவற்றில் எல்லாம் விசாரணை நடத்த ஏன் அமலாக்கத்துறை வரவில்லை? எல்லா ஆதாரங்களையும் தருகிறோம். அவர்கள் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தத் தயாரா?. அதிமுகவின் இந்த ஊழல் பெருச்சாளிகளைத்தான் டெல்லியில் மொத்தமாகச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் ஊழலுக்கு எதிராகத் தமிழ்நாட்டுக்கு வந்து முழங்கி விட்டுப் போயிருக்கிறார்.
'பம்மாத்து பழனிசாமி'
ஜெயலலிதாவுடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவைத் தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு அமலாக்கத்துறையையும், சிபிஐயையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தியது பாஜக. அவர்களும் பயந்துபோய் பாஜகவின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட 'பாதம்தாங்கி' பழனிசாமி, செந்தில் பாலாஜியைப் பற்றி குறை சொல்கிறார்.
ஆனால், 2021 வரை அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். அப்போதெல்லாம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்கள்? இப்போது வாய்கிழியப் பேசுவோரை அப்போது எது தடுத்தது? 4 ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்ததாகப் புகார் எழுந்து, உயர்நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டவர்தான் பழனிசாமி. உடனடியாக உச்சநீதிமன்றத்துக்குத் தடை வாங்க ஓடிய யோக்கிய சிகாமணிதான் இந்தப் 'பம்மாத்து' பழனிசாமி. அவருக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
வைராலகும் கருணாநிதி வீடியோ
இந்தப் பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பாஜக தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை திமுக. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை திமுகவினர். சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு திமுககாரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான். நேற்றில் இருந்து சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நிறைய திமுக உடன்பிறப்புகள் தலைவர் கருணாநிதி பேசிய ஒரு விடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள். "என்ன யாரும் அடிக்க முடியாது. ஞாபகம் வெச்சிக்க. நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது" என்று இவர் பேசியிருக்கிறார். அதுதான் இப்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்
எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரியான மனிதசமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்!
நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காகக் கட்சி நடத்துகிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசிவரைக்கும் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறே இதற்கு சாட்சி! ஆதிக்க மனோபாவத்துடன் எதிர்த்தால், கொள்கைப் பட்டாளத்துடன் உறுதியோடு தடுப்போம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், மிசா காலம் என, நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை.
மூத்த தலைவர்களை கேட்டுப்பாருங்கள்
நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை. திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள். திமுகவையோ திமுகவினரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!
எனவே, பொறுப்புள்ள ஒன்றிய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பாஜக அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளே! உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள். 2024ஆம் ஆண்டில் நமக்கான தேர்தல் களம் காத்துக்கொண்டிருக்கிறது. அதில் நாம் இவர்களைச் சந்திப்போம்! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கருணாநிதி தந்த உள்ளவுறுதி நமக்கு இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் தாங்கிக் கடந்து செல்வோம்! நாற்பதிலும் வெல்வோம்!
மேலும் படிக்க | சிறை கன்ஃபார்ம்..? செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டது..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ