சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சேர்க்கப்பட்டு, முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தனர்.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி:- முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தேன். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். டாக்டர்களும் சிகிச்சைகள் குறித்து விரிவாக விளக்கினர். முதல்வரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார். அவர் பூரண உடல்நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை பெற்று வரும் சூழலில் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். முதல்வரின் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்களின் எதிர்காலத்துக்காக பணியாற்ற அவர் மீண்டு வருவார் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து முதல்வரின் உடல்நலம் பற்றி விசாரித்தேன். முதல்வரின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். முதல்வர் விரைவில் பூரண குணமடைய எனது சார்பிலும், புதுச்சேரி மக்களின் சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகிறார். அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் செல்கின்றனர்.