"காச நோய் இல்லாத சென்னை" திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்!

-

Last Updated : Oct 9, 2017, 06:33 PM IST
"காச நோய் இல்லாத சென்னை" திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்! title=

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.10.2017) தலைமைச் செயலகத்தில் ‘காச நோய் இல்லாத சென்னை’ திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இதுகுறித்து தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

"பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி "காச நோய் இல்லாத சென்னை" -யை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, USAID மற்றும் Stop TB Partnership என்னும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நான்கு கட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

· முதல் கட்டமாக, காசநோய் உள்ளதை துரிதமாக கண்டறிதல்.

· அவ்வாறு அறிந்தபின் இரண்டாம் கட்டமாக, அந்நோயாளிகளுக்கு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் ஏற்பாடு செய்தல்.

· மூன்றாவது கட்டமாக, காசநோய் எளிதில், அதிகமாக தாக்கக்கூடிய குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று, அவர்களை பரிசோதனை செய்து, தேவை இருப்பின் அவர்களுக்கு ஊடுகதிர் மற்றும் சளிப்பரிசோதனை செய்தல். இப்பணிக்கென 7 நடமாடும் ஊர்திகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

· மேலும், நான்காம் கட்டமாக, காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதைக்கண்டு பயம் கொள்ளாமல், நோயாளிகளை ஒதுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, காசநோய் இல்லாத சென்னையை உருவாக்கும் குறிக்கோளை அடைய பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த நடவடிக்கைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் தோராயமாக 600 தனியார் மருத்துவமனைகள், 2000 தனியார் ஆய்வகக் கூடங்கள், 2000 மருந்தகங்கள் மற்றும் 12,000 மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காசநோயாளிகளை குறித்து தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் CBNAAT (Gene Xpert) பரிசோதனை தனியாரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் கொண்டு சேர்க்கவும், REACH அமைப்பு இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
 
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் காசநோய் குறித்த தற்போதைய நிலை, மேலும் மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்திய பிறகு உள்ள நிலை, பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு செய்ய இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி வழங்கப்படவுள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 வருடங்களுக்கு ரூ.26 கோடி மானியம் USAID நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக 10 CBNAAT கருவிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது.

இக்கருவியின் விலை ரூ.15 இலட்சமாகும். 10 கருவிகள் ரூ.1.50 கோடி மானியத்தில் Stop TB Partnership வழங்கியுள்ளது. இதற்கு தேவையான காட்ரேஜ் ரூ.4.5 கோடி மானியத்தில் வழங்கியுள்ளது. தனியார் மையத்தில் இந்தப் பரிசோதனை கட்டணம் ரூ.3000/- ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தப் பரிசோதனை அரசு மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக செய்து தரப்படும்.

இந்தக் கருவி தற்போதுள்ள நுண்ணோக்கி மூலம் கண்டறிவதை விடவும் பல மடங்கு துல்லியமாக டிபி கிருமிகளை 2 மணி நேரத்தில் கண்டறியும். மேலும், இது தீவிரமான காசநோயான எம்.டி.ஆர்.டிபி யையும் கண்டறியும். இது ஒரே சமயத்தில் நான்கு நபர்களின் மாதிரியை பரிசோதனை செய்யும். இதனால் நாள் ஒன்றுக்கு 10 கருவிகளின் மூலம் 120 நபர்களுக்கு பரிசோதனை செய்யலாம். நுண்ணோக்கியானது சளி மாதிரியில் 10,000 டிபி கிருமிகள் இருந்தால் மட்டுமே கண்டறியும். மேலும், இது ஆய்வக நுட்புநரின் திறமையை சார்ந்ததாகும்.

ஆனால், CBNAAT கருவியோ 100 டிபி கிருமிகள் இருந்தாலே கண்டறியும். மேலும், இது கணினி சார்ந்ததாகும். அதனால் தற்போது மாதத்திற்கு 430 நோயாளிகள் கண்டுபிடிக்கும் நிலையில் இந்த கருவி மூலம் 650 நோயாளிகள் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சளி மாதிரி மட்டுமல்லாது, ரத்தம், மலம், சிறுநீர் தவிர்த்து, அனைத்து உடற் திரவங்களின் மாதிரிகளிலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் டிபி நோய்தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை துவங்கப்படும். துரிதமாக கண்டறிவதால் டிபி நோய் சமூகத்தில் பரவுவது குறையும். இவ்வகையான நடவடிக்கைகளின் மூலம் "காசநோய் இல்லாத சென்னை" உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை வாழ்மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.10.2017) தலைமைச் செயலகத்தில், மத்திய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் மற்றும் Indian Council of Medical Research, Director General டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில், CBNAAT மருத்துவ கருவியை வழங்கிட அதனை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அஹமது, இ.ஆ.ப., தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் மாநில காசநோய் அலுவலர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News