தமிழக முதலமைச்சர் பழனிசாமி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை நேரில் சந்தித்து அவருக்குப் வாழ்த்துத் தெரிவித்தார்!
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதியாக நியமித்து சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்திரா உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைப்பார். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் உட்பட வழக்குகளை விசாரித்து இரு வேறு தீர்ப்புகளை அளித்தவர் இந்திரா பானர்ஜி. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அவருக்கு நாளை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியைச் சந்தித்துப் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.