செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதிநகர் 8வது தெருவில் வசித்து வருபவர் மதன். இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒன்றாக வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நேரங்களில் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி தமிழ்செல்வி திடீரென மாயமானார். இதுபற்றி அறிந்ததும் தமிழ்செல்வியின் பெற்றோர் மணிகண்டன், பல்கிஸ் ஆகிய இருவரும் மகள் காணாமல் போனது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தமிழ்செல்வியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அவரது கணவர் மதனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அவர் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அப்படி விசாரணையின்போது தெரிய வந்த உண்மை என்னவென்றால், தமிழ்செல்வியை கடந்த 26ந்தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள சுற்றுலா தலமான கோனே அருவி மலைப்பகுதிக்கு மதன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்குள் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அந்த கருத்து வேறுபாடு சிறிது நேரத்தில் பெரும் தகராறாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மதன் தமிழ்செல்வியை கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் சிம்பு?
இதில் காயங்களுடன் தவித்த தமிழ்செல்வியை அங்கேயே விட்டு விட்டு மதன் வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று மதன் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதைக் கேட்ட போலீஸார், உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு விரைந்து சென்றனர். தமிழ்செல்வியை மலைப்பகுதியில் கத்தியால் குத்திய இடத்தை மதன் அடையாளம் காட்டினார். அவருடன் சென்றிருந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் தமிழ்செல்வியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநில போலீசாரின் உதவியையும் நாடினர். கோனே அருவி ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட நாராயண வனம் பகுதியில் அமைந்து உள்ளது என்பதால் சித்தூர் மாவட்ட போலீசாரும், செங்குன்றம் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
இருப்பினும் மலைப்பகுதியில் காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி என்ன ஆனார்? என்பது தெரியவே இல்லை. தமிழ்செல்வியை, மதன் கத்தியால் குத்தியதாக கூறி ஒரு மாதம் ஆகி விட்டது. இது தொடர்பாக மதன் மற்றும் அவரது நண்பர்கள் பந்தா, சந்தோஷ் மற்றும் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கோனே மலைப்பகுதியில் அம்மாநில வனத்துறையினர் பொறுத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மலைப்பகுதிக்கு தமிழ்செல்வியும் மதனும் ஒன்றாக சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதே நேரத்தில் திரும்பும் போது மதன் மட்டும் தனியாக வரும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இது ஒன்றை வைத்தே மதன், மலைப்பகுதியில் தமிழ் செல்வியை விட்டு விட்டு வந்திருப்பதை போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள்.
மலைப்பகுதியில் காதல் மனைவியை கத்தியால் குத்தி போட்டு விட்டு தப்பி வந்த மதன் போலீசில் பிடிபட்டிருந்த போதிலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது.
தமிழ்செல்வி மாயமானது செங்குன்றம் பகுதியாக இருந்த போதிலும் அவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட பகுதியாகும். இதனால் இந்த வழக்கை ஆந்திர மாநில போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
கத்திக்குத்து காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி மலை பகுதியில் ஆழமான மறைவான புதர் மண்டிய பகுதிகளில் தவறி விழுந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்செல்வியின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாததால் அவரது பெற்றோரான மணிகண்டன், பல்கிஸ் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தவியாய் தவித்து வருகிறார்கள்.
தமிழ்செல்வியிடம் ஒரு மாதத்துக்கு முன்பு மதன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி அன்று கடைசியாக எங்கள் மகளிடம் பேசினோம் என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர். மகளுக்கு போன் செய்யும் போதெல்லாம் மதன் போனை வாங்கி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகவும், தமிழ்செல்வியின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஒரு மாதமாகியும் தங்களது மகள் பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் தமிழ்செல்வியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் வேகத்தை செங்குன்றம் போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | தனுஷிடம் இருக்கும் 5 ஆடம்பர சொகுசு கார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ