கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓய்வூதியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். ஊதிய ஒப்பந்த உயர்வை ஓய்வூதியத்தில் சேர்த்து வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலுவைப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்குப் பிறகு அவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.375 கோடியில் ரூ.179 கோடியை தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் வழங்கியது. மீதி தொகையை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. மேலும் அதைக்குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாயாண்டி என்பவர் மீதமுள்ள தொகையை தமிழக அரசு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறி கடிதம் எழுதி இருந்தார். விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.204 கோடி தொகையை வரும் 11-ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணையை வரும் 17-ம் தேதி ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.