கடந்த ஆண்டு டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த தடை உத்தரவை நாடு முழுவதும் சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு அமல்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் பட்டாசு தயாரிப்புக்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமல் செய்யப்பட்டது.
கடந்த 23 ஆம் தேதி நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை உத்தரவு கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பட்டாசு தயாரிப்புக்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலில் உள்ளது என நீதிமன்றம் கூறியது.
பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது உச்ச நீதிமன்றம். அதில் குறிப்பாக தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரை முக்கால் மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று தமிழக சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டாசு வெடிப்பதற்க்கான இரவு 8 மணி முதல் 10 மணி வரை இருக்கும் நேரத்தை, காலை அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.