’சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்’ கெடு விதித்த அண்ணாமலை

அமைச்சர் சேகர் பாபுவை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2023, 04:37 PM IST
  • அமைச்சரவையில் இருந்து உடனடியாக விலகுங்கள்
  • சேகர் பாபுவுக்கு கெடு விதித்த அண்ணாமலை
  • செப்டம்பர் 10 ஆம் தேதி முற்றுகை போராட்டம்
’சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்’ கெடு விதித்த அண்ணாமலை title=

சென்னையில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாடு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக அமைச்சர் உதயநிதி பேசியதை அரசியல் தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறது. கொசு, டெங்கு, கொரோனாபோல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அவர் பேசியதை இந்து மதத்துக்கு எதிராக பேசியதாக அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பேசினர். தமிழ்நாட்டிலும் பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும் படிக்க - “இதுதான் திராவிட மாடல்.. வழக்கு போடுங்க பாத்துக்குறோம்” - உதயநிதி!

ஆனால் அவருடைய பேச்சுக்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை யாரு, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக மீண்டும் டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டிருக்கும் அண்ணாமலை, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், " சென்னையில், சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் பிழைப்புவாதிகள் நடத்திய கூட்டமொன்றில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் திரு. வீரமணி அவர்கள், இந்து மதமும் சனாதன தர்மமும் வேறுவேறல்ல. இரண்டும் ஒன்றுதான். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார். 

அவருக்குப் பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இவர்களது நோக்கம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. ஆனால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் பேசிய அதே கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே சேகர்பாபு கலந்து கொண்டதும், இவர்கள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார். 

இன்னும் ஒரு வார காலத்தில், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், தனது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து திரு. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை?. வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள், திரு சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றால், செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - 'டெங்கு, மலேரியா போன்றது சனாதனம்...' உதயநிதி பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு - பதிலடி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News