சென்னை: மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், காவிரியில் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக . கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை தற்போது நிரம்பி வழிகின்றன. இதனால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு பிற 2.80 லட்சம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கலை தாண்டி பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டே இருக்கிறது. தற்போது மேட்டூர் அணைக்க 2.20 லட்சம் கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துக்கொண்டே இருப்பதால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று காவிரி பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதால், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உட்பட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜல்சக்தி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
இந்த கடிதத்தை அடுத்து தமிழக அரசு சார்பில், "காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும், காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது எனவும் கூறியுள்ளது. 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.