தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனை குறித்து புதுவை மாநில ஆளுநர் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக தலைநகரான சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி "இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம்" என காட்டமாக விமர்சித்திருந்தார்
கிரண்பேடியின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வளர்மதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தான் வகிக்கும் மதிப்பிர்குறிய பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது அதிச்சியும் வேதனையும் தரும் வகையில் அமைத்திருக்கிறது. பெண்மைக்கே உரிய உயர்ந்த தாயுள்ளமும் சிறது இன்றி மதிப்பிற்குரிய கிரண்பேடி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்தியா முழுவதும் கடுமையான வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்திய நாட்டில் உள்ள மாவட்டங்களில் சரிபாதிக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதையும், கடந்த 65 ஆண்டுகளில் இப்படி குறைவான மழை அளவை நாடு சந்தித்ததில்லை என்ற புள்ளி விவரத்தையும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தெரிவித்திருக்கிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை மட்டும் சாந்திராமல், வீராணம் திட்டம் மூலமும், ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலமும் தண்ணீர் பெற்று, சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் வழங்க இயன்றது அனைத்தையும் ஜெயலலிதா அமைத்துத் தந்த அரசு செய்து வருகிறது. இந்த உண்மைகளை எல்லாம் உணராமலும், ஒதுக்கித் தள்ளிவிட்டும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரணபேடி சமூக வலைதளத்தில் " ஏனோதானோ" என்று கருத்து கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
புகழ் வாய்ந்த காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்ற இங்கீதம் கூடத்தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் சேர வேண்டிய உரிய பங்கினைப் பெற்றுதர பாடுபட வேண்டிய இந்த நேரத்தில், தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல அன்புரையாகக் கூறிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.