தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி-4 ல் அடங்கிய பல்வேறு பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) 9351 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி 13.12.2017 வரை 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
பின்னர் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் பாதிப்பு காரணமாக கடைசி தேதி 20.12.2017 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் மட்டும் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடைசி நாளான 20.12.2017 அன்று வரை 20.83 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்வாணைய வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கடைசி தேதி நீட்டிக்கப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் கூடுதலாக 9,040 விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இத்தேர்வுக்கு 11.34 லட்சம் பெண் விண்ணப்பதாரர்களும், 9.48 லட்சம் ஆண் விண்ணப்பதாரர்களும் 54 மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் தேர்வுக்கட்டணத்தை நேற்று (21.12.2017) நள்ளிரவு வரை இணையதளத்தில் (Online) செலுத்தலாம் என்றும் தெரிவித்தனர்.
விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் “APPLICATION STATUS” என்ற இணைப்பினை கிளிக் செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in ல் உள்ளன.