உஷா மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

உஷா என்கிற பெண் தவறி விழுந்து இறந்தது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில்,

Last Updated : Mar 21, 2018, 02:20 PM IST
உஷா மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் title=

திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த உஷா என்கிற பெண் தவறி விழுந்து இறந்தது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில்,

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகில், 7.3.2018 அன்று இரவு, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் குழுவினருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தஞ்சாவூர் சாலையில் திருச்சி நோக்கி தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை ஆய்வாளர் நிறுத்தி, அவ்வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார். அவ்வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், தான் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும், சாவியைத் தருமாறும் கேட்டதால் ஆய்வாளர் சாவியைக் கொடுத்துள்ளார். 

காவலர்கள் எதிர்பாராத சமயத்தில், ராஜா தனது வாகனத்தை தனது மனைவியுடன் வேகமாக அவ்விடத்தை விட்டு ஓட்டிச் சென்றுள்ளார். உடனே காவல் ஆய்வாளர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் விரட்டிச் சென்று, பாரத மிகு மின் நிலையம், கணேசா ரவுண்டானா அருகில் வேகமாக சென்று கொண்டிருந்த ராஜாவை நிறுத்திய போது, ராஜா கட்டுப்பாட்டை இழந்து அவரும், பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி திருமதி உஷாவும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு மருத்துவர்கள் உஷா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜா வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 2,000 பேர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து கல் வீச்சில் ஈடுபட்டனர்.

இக்கல்வீச்சு சம்பவத்தில் 44 அரசுப் பேருந்துகள், 6 காவல் வாகனங்கள், ஒரு  2 வருவாய்த் துறை வாகனம் ஆகியவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. ஒரு பெண் காவலர் உட்பட 11 காவலர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து, அவர்களை கலைந்து போகச் செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

உஷா இறந்து போனது தொடர்பாக க்ஷழநுடு காவல் நிலையத்தில் உஷாவின் கணவர் ராஜா அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(2), 336ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டு கல் வீசி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். உயிரிழந்த உஷாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, 8.3.2018 அன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, உயிரிழந்த உஷா குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டேன்.

இது சம்பந்தமாக, திருவெறும்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணையின் முடிவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இம்மாமன்றத்தின் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Trending News