IPL 2019: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றியை பெற்றது. 

Last Updated : Mar 29, 2019, 07:28 AM IST
IPL 2019: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி title=

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றியை பெற்றது. 

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. 

இதில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 

முதல் 6 ஓவர்களில் 52 ரன்கள் திரட்டினர். இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்த டி காக் போல்டு ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் எடுத்த அவுட் ஆனார். 

அடுத்து வந்த யுவராஜ்சிங், யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்கள் விளாசி அட்டகாசப்படுத்தினார். யுவராஜ்சிங் 23 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் , ஹெட்மயர் 5 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையுடன் வெளியேறினார்.

கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. 

2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

Trending News