2011 இங்கிலாந்தில்... 2023 ஆப்கானில்... சொந்த நாட்டை வீழ்த்தி சாதித்த ஜோனதன் டிராட்!

Jonathan Trott: இந்த வெற்றியினால் வரும் தாக்கம் உலகக் கோப்பையில் மட்டுமின்றி எதிர்காலத்தில் அத்தனை போட்டிகளிலும் எதிரொலிக்கும் என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் வெற்றிக்கு பின் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2023, 10:20 AM IST
  • ஜோனதன் டிராட் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இங்கிலாந்து 2011 உலகக் கோப்பையில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தபோது, இவர் அணியில் இருந்தார்.
  • ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் 2ஆவது வெற்றியை பெற்றது.
2011 இங்கிலாந்தில்... 2023 ஆப்கானில்... சொந்த நாட்டை வீழ்த்தி சாதித்த ஜோனதன் டிராட்!  title=

Jonathan Trott: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே பெரும் புத்துணர்ச்சியை அளித்துள்ள வெற்றி என்றால் நேற்று ஆப்கான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றி வெற்றிதான் என்று கூறலாம். சமீப கால கிரிக்கெட்டில் அதாவது மூன்று வடிவத்திலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இங்கிலாந்து அணியின் பலமிக்க பேட்டிங் ஆர்டரை ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட் செய்தது அதிர்ஷடத்தினால் அல்ல, அந்த அணியின் சுழற்பந்துவீச்சு முன்னணி அணிகளை தடுமாற வைக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

இது கடைசி அல்ல...

வெறும் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அந்த அணி சிறந்த பங்களிப்பை வழங்கியது. குறிப்பாக ஓப்பனரான குர்பாஸின் அதிரடி என்பது நேற்றைய வெற்றியின் சிறப்பான பங்கை வகிக்கிறது. அவருக்கு பின் இக்ரம் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று விளையாடி விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்டார். இறுதி வரிசையில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மானின் தலா 20+ ரன்களும் நேற்றைய வெற்றியில் பெரிய வித்தியாசத்தை பெற வழிவகுத்தது எனலாம். 

இருப்பினும், இங்கிலாந்து அணி இதுபோன்று பல தோல்விகளை சந்தித்திருந்தாலும் அசுர பலத்துடன் மீண்டு வந்துள்ளதை நாம் கண்டிருப்போம். உதாரணமாக, 2015 உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று தொடரில் இருந்து வெளியேறிய பின், இங்கிலாந்து அணி இயான் மோர்கன் தலைமையில் எழுச்சி கண்டு 2019இல் உலகக் கோப்பையை முத்தமிட்டதை நம்மால் மறக்க முடியாது. ஆனால், இந்த வெற்றி ஆப்கனுக்கு முதலாவதாக இருக்கலாம், ஆனால் கடைசியானது அல்ல என்பதை நேற்றைய ஆட்டம் நிரூபித்துள்ளது. 

தொடர்ச்சியான தோல்விக்கு முற்றுப்புள்ளி

ஆப்கன் அணி உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 14 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தது. உலகக் கோப்பையில் இது அந்த அணியின் இரண்டாவது வெற்றியாகும். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இது புதுசு இல்லை... உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் 'அதிர்ச்சி தோல்விகள்' இதோ!

வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து ஆப்கன் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் (Jonathan Trott),"இந்த வெற்றி ஆப்கானிஸ்தானில் உள்ள ஆண், பெண் அனைவரையும் கிரிக்கெட்டை நோக்கி கொண்டுவரும்" என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த வீரர்கள் (ஆப்கன் வீரர்கள்) கிரிக்கெட்டை தாண்டிய ஒரு காரணத்திற்காக விளையாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

மக்களின் கஷ்டங்களை அறிந்திருக்கிறார்கள்...

இயற்கை பேரழிவு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக ஆப்கன் மக்கள் அனுபவிக்கும் விஷயங்கள் மற்றும் கஷ்டங்கள வீரர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே, இது ஆப்கன் மக்களின் முகத்தில் ஒரு புன்னகையைத் தருவதோடு, ஆப்கானிஸ்தானில் அவர்கள் எங்கிருந்தாலும் கிரிக்கெட் பேட் அல்லது கிரிக்கெட் பந்தை எடுத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கும் என்றால், அதுதான் இவர்கள் அடைந்த இலக்கு.

இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது, நிச்சயமாக நாங்கள் விளையாடிய விதத்திலும், வெற்றி பெற்ற வித்தியாசத்திலும். இதில் இருந்து பெறும் நம்பிக்கை நிறைய இருக்கிறது, இது மற்ற எல்லா ஆட்டங்களிலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அது இந்த உலகக் கோப்பையில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆப்கான் விளையாடும் அத்தனை போட்டியிலும்தான்" என்றார். 

அப்போது இங்கிலாந்தில்... இப்போது ஆப்கனில்...

மேலும், ஜோனதான் டிராட்டுக்கு இதுபோன்ற அதிர்ச்சி தோல்விகள் புதிதல்ல. 2011ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அயர்லாந்திடமும், வங்கதேசத்திடம் தோல்வியடைந்தபோது, அவர் இங்கிலாந்து அணியில் விளையாடிக் கொண்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. மேலும், அவர் இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வி குறித்து கூறியதாவது,"அதுதான் உலகக் கோப்பையின் அழகு என்று நினைக்கிறேன். அதிர்ச்சி தோல்விகள் தான் ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் உங்களை மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குள் தள்ளுகிறது. ஆனால், இப்போது எங்களால் (ஆப்கானிஸ்தான் அணி) உலகில் யாருடனும் போட்டியிட முடியும்" என அவர் கூறியுள்ளார். 

மேலும் அவர்,"எங்கள் (ஆப்கான்) வீரர்கள் நிறைய பேர் இங்கிலாந்து வீரர்களுடன் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடியிருப்பதால், ஒவ்வொரு வீரரின் நுணுக்கங்களையும் அவர்கள் தெரிந்துவைத்துள்ளனர். அதனால் அந்த பரிச்சயமும் நம்பிக்கையும் இருக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | ஜெய் ஸ்ரீராம் கோஷம் சரியா... பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சு நியாபகம் இருக்கா - இரண்டும் ஒன்னுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News