ராஜஸ்தான் கோட்டையில் சிம்மாசனமிட்ட குஜராத் டைட்டன்ஸ் - தரமான வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 11:32 PM IST
  • குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது
  • புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது
ராஜஸ்தான் கோட்டையில் சிம்மாசனமிட்ட குஜராத் டைட்டன்ஸ் - தரமான வெற்றி  title=
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியில் மேத்யூ வேட் 12 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சுப்மான் கில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் சில போட்டிகளில் சொதப்பிய பிறகு குஜராத் அணியில் இருந்து நீக்கப்பட்ட விஜய் சங்கருக்கு இப்போட்டியில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் 7 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 
 
கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினார். 52 பந்துகளை எதிர்கொண்ட அவர் 82 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய அபினவ் மனோகர் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். பின்வரிசையில் களமிறங்கிய மில்லர் வந்தவுடன் அதிரடி காட்டினார். 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட மில்லர் 31 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் விளாசியது.
 
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் மற்றும் படிக்கல் ஆகியோர் ஓபனிங் இறங்கினர். ஃபார்ம் இல்லாமல் இருக்கும் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பட்லர், 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசி அவுட்டானார். கேப்டன் சாம்சன் மற்றும் வாண்டர் டசன், அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹெட்மயர் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடினார். 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 
 
 
இதனையடுத்து வந்த வீரர்கள் சோபிக்கத் தவறியதால் ராஜஸ்தான் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. முடிவில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, ஐபிஎல் 2022 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கும் முன்னேறியது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News