INDvsWI: 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

Last Updated : Oct 28, 2018, 09:49 AM IST
INDvsWI: 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்! title=

43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 

இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிவடைந்தது. 

இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்.

கியெரன் பொவேல், சந்த்ரபால் ஹெம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெம்ராஜ் 15 ரன்களிலும், பொவேல் 21 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். 4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் அபாரமாக விளையாடி வந்தனர். ஹெட்மையர் 37 ரன்னிலும், ரோவ்மேன் பொவேல் 4 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 32 ரன்னிலும் அவுட்டாகினர். ஷாய் ஹோப் 95 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து களம் இறங்கிய நர்ஸ் அதிரடியாக ஆடி 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆடினார். ஷிகர் தவான் 35 ரன்னிலும், அம்பதி ராயுடு 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 24 ரன்னிலும் அவுட்டாகினர். டோனி 7 ரன்னில் வெளியேறினார். அபாரமாக ஆடி சதமடித்த கோலி 107 ரன்களில் அவுட்டானார். 

 இதையடுத்து, இந்தியா 47.4 ஓவரில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1- என தொடரில் சமனிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி 29ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

Trending News