IND vs SA: நாளை வெற்றி உறுதி: டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 21, 2019, 06:45 PM IST
IND vs SA: நாளை வெற்றி உறுதி: டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் இந்தியா title=

ராஞ்சி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ரான்சி மைதானத்தில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கிய மயங்க் அகர்வால் 10(19) ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்ற., மறுபுறம் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 117*(164) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ரஹானே நிதானமாக விளையாடி 83(135) ரன்கள் குவித்தார். என்ற போதிலும் ஆட்டத்தின் 58-வது ஓவர் முடிவில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212(255) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ரஹானே 115(192) ரன்கள் குவித்தார். ரவிந்திர ஜடேஜா 51(119), உமேஷ் யாதவ் 31(10) ரன்கள் குவிக்க இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. பின்னர் தங்களது ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

இதனைத்தொடர்ந்த தங்களது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. இந்தமுறையும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டை கைப்பற்றினால் இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்படும். 

கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும்.

Trending News