இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது...!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்கள் சேர்த்தது.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய முன்தினம் 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 46 ரன்னுடனும், ஜோ ரூட் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அலஸ்டைர் குக் தனது கடைசி இன்னிங்சில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டும் சதம் அடித்தார். இறுதியாக ஜோ ரூட் 125 ரன்னிலும், அலஸ்டைர் குக் 147 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் குவித்தது.
அதன்பின் வந்த பேர்ஸ்டோவ் 18 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழந்த நிலையில் 437 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இருந்தாலும் இங்கிலாந்து டிக்ளேர் செய்யவில்லை.
இறுதியாக 112.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக இருந்தது. ஆண்டர்சன் வீசிய இரண்டாவது ஓவரில் தவான் ஒரு ரன்னிலும், புஜாரா ரன் ஏதும் அடிக்காமலும் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அடுத்து பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே களமிறங்கிய விராட் கோலி பிராட் வீசிய 3-வது ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.
தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் ரகானே இருவரும் மேற்கொண்டு விக்கெட்டுக்களை பறிகொடுக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கள் இழந்து 58 ரன்கள் அடித்திருந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுக்களையும், பிராட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டத்தின் 5-ம் நாளான இன்றைய தினம் இந்தியா வெற்றி பெற மேற்கொண்டு 406 ரன்கள் அடிக்க வேண்டும்....?