வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி கடைசியாக விளையாடிய 18 டெஸ்டில் தோல்வி எதையும் சந்திக்க வில்லை. 14 டெஸ்டில் வெற்றி பெற்றது. 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 5 டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது.
இதேபோல வங்காள தேசத்துக்கு எதிராகவும் வென்று தொடர்ச்சியாக 6-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் நமது அணி வங்காள தேசம் எதிராகவும் அதிரடியை வெளிப்படுத்தும்.
இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்டில் விளையாடும் வங்காளதேசம் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் திகழ்கிறது. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சந்திப்பது என்பது வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய சவாலாகும்.
கேப்டன் முஷ்பிக்குர் ரகீம், சகீப்-அல்-ஹசன், தமிம் இக்பால் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். தொடக்க வீரர் இம்ருல் காயத்தால் விலகியது பாதிப்பே.
இந்த டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.