டி20 தொடர் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வெள்ளிக்கிழமை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் தனது அணிக்கு வெற்றி பெற்று தந்தது மட்டும் அல்லாமல், இந்த ஆட்டத்தில் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்ததற்காக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இதன் மூலம் அவர் தற்போது 12 டி20 ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ளார்.
டி20 போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றுள்ளார். இவருடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபியுடன் கூட்டு அதிகபட்சம் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஹெட்மையர் 56(41) ரன்கள் குவித்தார். இவின் லிவிஸ் 40(17) ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் சாஹல் இரண்டு விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அணித்தலைவர் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 94(50) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக லோகேஷ் ராகுல் 62(40) ரன்கள் குவித்தார். இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 18.4-வது பந்தில் 4 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இது இவரது 12-வது டி20 ஆட்ட நாயகன் விருது ஆகும். இதன் மூலம் அதிக டி20 ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியிலில் கோலி முதல் இடம் பிடித்தார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஆப்கானின் மொகமது நபி (75 போட்டிகளில் 12 விருது), பாகிஸ்தானின் ஷாயித் அப்ரீடி (11 விருது) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.