இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் திங்களன்று வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் குறுகிய வடிவத்தில் 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சிறந்த பந்துவீச்சாளருக்கான பட்டியலில் 42-வது இடத்திற்கு முன்னேறினார்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சர்வதேச டி20 தரவரிசையில் 42-வது இடத்தைப் பிடிப்பதற்காக 88 இடங்களை உயர்த்தியுள்ளார் தீபக் சஹர்.
விதர்பா கிரிக்கெட் அசோசியேஷனில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றபோது, லிட்டன் தாஸ், சௌமயா சர்க்கார், முகமது மிதுன், அமினுல் இஸ்லாம், ஷைஃபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 27 வயதான தீபக் சஹர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
மேலும் டி20 போட்டிகளில் ஹார்ட்ரிக் எடுத்த முதல் இந்தியர் என்னும் பெருமையினையும் இவர் பெற்றார். மேலும் இப்போட்டியில் 3.2 ஓவர்கள் வீசிய தீபக், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதில் ஒரு ஹாட்ரிக் அடக்கம்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்த தீபக், தொடர்ந்து 20-வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார். இதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் தனது முதல் ஹாட்ரிகினை பதிவு செய்தார்.
இதன் மூலம் அவர் இலங்கையின் அஜந்தா மெண்டிஸை விஞ்சி சாதனை படைத்தார். முன்னதாக 2012-ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் மெண்டிஸ் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் தற்போது 7-6 விக்கெட் வீழ்த்திய தீபக், மென்டீஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
டி20 பந்துவீச்சு தரவரிசை பட்டியலை பொருத்தவரையில்., தீபக் சஹர் 42-வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக 40-வது இடத்தில் பூம்ரா, 29-வது இடத்தில் புவனேஷ்வர் குமார், 27-வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர், 25-வது இடத்தில் யுஜ்வேந்திர சாஹல், 18-வது இடத்தில் குர்ணல் பாண்டையா, 14-வது இடத்தில் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல் இடத்தினை தொடர்ந்து அப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் வைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் மிட்சல் சாட்னர் மற்றும் மூன்றாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் இமாத் வாஷிம் தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.