ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100% வெற்றி பெற்ற முதல் அணி இந்தியா!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற முதல் அணி இந்தியா ஆகும். மொத்தம் 240 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 22, 2019, 03:51 PM IST
ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100% வெற்றி பெற்ற முதல் அணி இந்தியா!! title=

புதுடெல்லி: ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (ICC World Test Championship) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதுடன் மூலம், தன் சொந்த மண்ணில் "பிரவுன் வாஷ்" செய்துள்ளது. இந்த தொடரை வென்றதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது இந்திய அணியின் மொத்த புள்ளிகள் 240 ஆக உயர்ந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற முதல் அணி இந்தியா ஆகும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் மற்ற அணிகளால் 60 புள்ளிகளுக்கு மேல் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் 40 புள்ளிகள் கிடைக்கும். மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வகையில் இந்திய அணிக்கு மொத்தம் 120 புள்ளிகள் கிடைத்தன. இதற்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்தியா 120 புள்ளிகளைப் பெற்றது. இவை இரண்டு சேர்த்து மொத்தம் 240 புள்ளிகள் கிடைத்துள்ளன. ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மூன்று போட்டிகளில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு புள்ளிகள் கூட கிடைக்கவில்லை.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பான ஒவ்வொரு தொடரிலும் ஐ.சி.சி விதிகள் படி அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். அது இரண்டு போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் அல்லது ஐந்து போட்டிகள் தொடராக இருந்தாலும் சரி. விதிகளின்படி, டெஸ்ட் தொடரின் புள்ளிகள் வெற்றியின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகளும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், ஒவ்வொரு வெற்றிக்கும் 40 புள்ளிகள் கிடைக்கும். இதேபோல், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ஒரு வெற்றிக்கு 24 புள்ளிகள் வழங்கப்படும்.

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஐந்து போட்டிகளில் விளையாடி உள்ளது. அனைத்து போட்டியிலும் வென்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்திய அணிக்கு முழு மதிப்பெண்கள் கிடைத்தன. ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வெற்றி விகிதம் 100 சதவீதமாகும். இதுவரை வேறு எந்த அணியும் 50 சதவீதத்துக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.

ICC World Test Championship
ICC-cricket.com

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. மூன்று அணிகளும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த போட்டிகளையெல்லாம் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற போட்டிகள் டிராவில் முடிந்தது. நியூசிலாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் 240 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை தலா 60 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 56 புள்ளிகள், இங்கிலாந்து 56 புள்ளிகள் பெற்றுள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இதுவரை ஒரு புள்ளி கூட பெறவில்லை.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில்  இன்னும் விளையாடவில்லை. அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணத்திற்கு பங்களாதேஷ் அணி வருகிறது. அவர் இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவார். இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். இரண்டு போட்டிகள் என்பதால், இந்த தொடருக்கு 120 புள்ளிகள் கிடைக்கும்.

Trending News