இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்ப முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், அந்த அணியின் பீட்டர் ஹான்சாம்கோப் நிதானமாக ஆடி அணிக்கு பலம் சேர்த்தார். அவர் 63 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 48.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய யூசுவெந்திர சஹால் ஆறு விக்கெட்டை கைப்பற்றினார். முகம்மது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்போது 10வது ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இந்தியா நான்கு முறையும் தொடர்களை வென்றுள்ளது. இன்று 10வது ஒருநாள் தொடரின் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது.
ஆனால் ஒருநாள் தொடரை பொருத்த வரை, ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை இந்திய அணி ஒரு தொடரைக் கூட வென்றதில்லை. தற்போது விராட் தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு தொடரை வென்றதில்லை என்ற கரும்புள்ளியை அகற்ற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும்.
இதற்க்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1985 மற்றும் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது. ஆனால் அதில் ஆறு அணிகள்(1985) மற்றும் மூன்று அணிகள்(2008) பங்கேற்றனர்.
முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற "இந்திய அணி" என்ற வரலாறு சாதனையை படைக்குமா? என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.