யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தனது காலிறுதிப் போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-3 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது.
பிரான்ஸின் மார்சீலி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் போலந்தும் போர்ச்சுகலும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது போலந்து. பிறகு 33-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பதிலுக்கு ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 6-ம் தேதி நடைபெறுகிற அரையிறுதி ஆட்டத்தில், பெல்ஜியம் அல்லது வேல்ஸைச் சந்திக்கவுள்ளது போர்ச்சுகல்.