Duleep Trophy: சாம்பியன் பட்டம் வென்ற India A; ருதுராஜ் அப்செட் - சாய் சுதர்சனின் சதம் வீண்

Duleep Trophy 2024: துலிப் டிராபி 2024 தொடரில் ருதுராஜின் India C அணியை, மயங்க் அகர்வாலின் India A அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாம்பியன்ஷிப் கோப்பையையும் தட்டித்தூக்கியது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2024, 06:26 PM IST
  • சாய் சுதர்சன் சதம் அடித்தது வீண்.
  • போட்டி நிறைவடைய 25 பந்துகளே இருந்தன.
  • கடைசி கட்டத்தில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக வீசினார்.
Duleep Trophy: சாம்பியன் பட்டம் வென்ற India A; ருதுராஜ் அப்செட் - சாய் சுதர்சனின் சதம் வீண் title=

Duleep Trophy 2024 Champions: துலிப் டிராபி 2024 தொடர் கடந்த செப். 5ஆம் தேதி தொடங்கியது. இந்தியா A, இந்தியா B, இந்தியா C, இந்தியா D என நான்கு அணிகள் இதில் மோதின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதின. மூன்று சுற்றுகளாக மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றன. முதல் சுற்று போட்டிகள் செப். 5ஆம் தேதியும், இரண்டாம் சுற்று போட்டிகள் செப். 12ஆம் தேதியும், மூன்றாம் சுற்று போட்டிகள் செப். 19ஆம் தேதியும் நடைபெற்றன. 

இந்த தொடரில் நாக்-அவுட் சுற்றோ அல்லது இறுதிப்போட்டியோ கிடையாது என்பதால் புள்ளிகள் அடிப்படையில்தான் கோப்பையை வெல்ல முடியும். இதில் வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் கொடுக்கப்படும். இன்னிங்ஸ் அல்லது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் போனஸாக ஒரு புள்ளி என மொத்தம் 7 புள்ளிகள் கொடுக்கப்படும். ஒருவேளை ஆட்டம் டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும். அதேபோல் டிராவான போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறாத அணிக்கு 1 புள்ளி வழங்கப்படும். ஒருவேளை ஆட்டம் டை ஆனால் இரண்டு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் வழங்கப்படும். 

முன்னணியில் இருந்த இந்தியா C

இந்த சூழலில், முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணி  9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா B அணி 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா A அணி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்தில் இருந்தது.

மேலும் படிக்க | IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?

சாம்பியனை தீர்மானிக்கும் போட்டி

அந்த வகையில் இறுதிச் சுற்று போட்டிகள் கடந்த செப். 19ஆம் தேதி தொடங்கியது. அதில் இந்தியா A - இந்தியா C அணிகளும், இந்தியா B - இந்தியா D அணிகளும் மோதின. இதில் இந்தியா D அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா D அணி 6 புள்ளிகளையும், இந்தியா B அணி 7 புள்ளிகளையும் பெற்றன. கடைசியாக இந்தியா A - இந்தியா C அணிகள் மோதிய போட்டிதான் சாம்பியனை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது. 

இந்தியா A - இந்தியா C

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா C அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 85 ஓவர்கள் அவர்கள் இந்தியா C பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. துலிப் டிராபியை வெல்ல இந்தியா C இந்த போட்டியை டிரா செய்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டது. மறுபுறம் இந்தியா A அணி இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும். ஏனென்றால், இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா A அணி முன்னிலை பெற்றது. இதனால், போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா C மொத்தம் 10 புள்ளிகளை பெறும், இந்தியா A அணி 9 புள்ளிகளைதான் பெறும். எனவே, போட்டியை வென்றால் மொத்தம் 12 புள்ளிகளுடன் கோப்பையை கைப்பற்றலாம் என்பதால் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா A அணி தீவிரமாக பந்துவீசியது. 

இந்தியா C அணியை பொறுத்தவரை அந்த அணியின் முக்கிய பேட்டர் பாபா இந்திரஜித் தசைபிடிப்பு காரணமாக முதல் இன்னிங்ஸிலேயே களத்தில் இருந்து வெளியேறியதால் அவர் இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கடினம் என்ற நிலை ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க, இரண்டாம் இன்னிங்ஸில் புதிய பந்து தாக்குதலை சமாளிக்கவும், டாப் ஆர்டர் பேட்டிங்கை பாதுகாக்கவும் ஓப்பனிங்கில் ருதுராஜ் உடன் டெயிலெண்டரான வைஷாக் விஜயகுமார் களமிறங்கினார். 

போராடிய சாய் சுதர்சன்

இந்தியா C பேட்டிங்கை பொறுத்தவரை வைஷாக் விஜயகுமார் 17 ரன்களில் ரன் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் சாய் சுதர்சன் நிலைத்து நின்று விளையாடி நிலையில், மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. ரஜத் பட்டிதார், இஷான் கிஷன், அபிஷேக் பொரேல், புல்கித் நரங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

டெயிலெண்டர்களுடன் சாய் சுதர்சனும் போராடினார். சாய் சுதர்சன் சதம் அடித்து ஆறுதல் அளித்த தனது போராட்டத்தை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், 10 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் ஆட்டம் டிராவாகி கோப்பையை வென்றுவிடும் நிலையில் இந்தியா C அணி இருந்தது. ஆனால், மானவ் சுதர் 77ஆவது ஓவரில் ஷம்ஸ் முலானியிடமும், சாய் சுதர்சன் 78ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவிடமும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் இந்தியா A அணி பக்கம் திரும்பியது.

முடித்து வைத்த பிரசித் கிருஷ்ணா

10ஆவது வீரராக களம் புகுந்த பாபா இந்திரஜித்தால் இடது காலை நகர்த்த முடியாத நிலையில், அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே பிரசித் கிருஷ்ணாவின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தார். அதை திலக் வர்மா அசத்தலாக கேட்ச் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் பிரசித் கிருஷ்ணா கைக்கு புது பந்தும் வந்து சேர அன்சுல் கம்போஜ் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தது இந்தியா A அணி... போட்டி நிறைவுபெற 26 பந்துகளே இருந்தபோது பிரசித் கிருஷ்ணாவின் அசத்தலான பந்துவீச்சால் இந்தியா A அணி சாம்பியன் ஆனது. 

இதன்மூலம், துலிப் டிராபி 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா A வென்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணி இரண்டாம் இடத்தையும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா B அணி மூன்றாம் இடத்தையும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.  

மேலும் படிக்க | IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News