India National Cricket Team: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இந்திய அணிக்கு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி வரும் சிட்னி டெஸ்ட் உடன் முடிகிறது. ஒருவேளை இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்தான் பலருக்கும் கடைசி தொடராக இருக்கும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கெனவே ஓய்வை அறிவித்துவிட்டார். புஜாரா, ரஹானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா உள்ளிட்டோரும் இனி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோருக்கும் இது கடைசி டெஸ்ட் தொடராக அமைய வாய்ப்புள்ளது. ஜடேஜா இடத்திற்கு அக்சர் பட்டேல் ரெடியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக மாறும் இந்திய டெஸ்ட் அணி
ஒட்டுமொத்தமாக இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த 10-12 வருடங்களாக சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்கள் ஓய்வு பெற உள்ளதால், ஜஸ்பிரித் பும்ராவின் கேப்டன்ஸியின் கீழ் முழுமையாக இளம் வீரர்களின் அணியாக இந்திய டெஸ்ட் அணி உருபெற இருக்கிறது எனலாம். பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோரே அடுத்தகட்ட மூத்த வீரர்களாக அணியில் இருப்பார்கள். அந்த வகையில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளது.
மேலும் படிக்க | ரோஹித் ஷர்மா முதல் அஸ்வின் வரை! இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த வீரர்கள்!
ரோஹித் ஓய்வுக்கு பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் ஆகியோர்தான் ஓப்பனிங் என்பதை இந்த ஆஸ்திரேலிய தொடர் உறுதிசெய்துவிட்டது. நம்பர் 4இல் விராட் கோலிக்கு பிறகு யார் விளையாடப்போகிறார் என்ற கேள்வி இருந்தாலும் அதற்கும் பல வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். சுப்மான் கில், நிதிஷ் குமார் ரெட்டி தொடங்கி ஏன் ரிஷப் பண்ட் கூட நம்பர் 4 இடத்தில் இறங்கிவிடப்பட வாய்ப்புள்ளது.
நம்பர் 3 ஏன் முக்கியம்?
ஆனால், இந்திய அணி அதிகம் கவனம் செலுத்த வேண்டிய இடம் நம்பர் 3 பேட்டர்தான். தற்போது இந்த இடத்தில் கில் இறங்கி இந்திய மண்ணில் ஓரளவு ரன்களை அடிக்கிறார் என்றாலும், வெளிநாடுகளில் பெரியளவில் சொதப்புகிறார்.
நம்பர் 3 இடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒன்றாகும். புதிய பந்தை தேய்மானம் அடைய செய்வது தொடங்கி, விரைவில் ஓரிரு விக்கெட்டுகள் சரிந்துவிட்டால் போட்டியை கட்டுக்குள் வைப்பதில் இருந்து பெரிய டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடும் பொறுப்பும் இந்த பேட்டருக்குதான் இருக்கும்.
தொடர் தோல்வியும்... நம்பர் 3 பிரச்னையும்...
நம்பர் 3இல் இறங்கி விளையாடுவதற்கு தனித்திறன் வேண்டும். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்திக்க தயாராக இருந்து, அதற்கான பேட்டிங் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பவரால் மட்டுமே இந்த இடத்தில் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவிக்க முடியும்.
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் நம்பர் 3 பலவீனமாக காட்சியளிக்கிறது. இதுதான் இந்திய அணியின் தொடர் சறுக்கலுக்கு முக்கிய காரணம். முதல் போட்டியில் தேவ்தத் படிக்கல், அடுத்த இரண்டு போட்டிகளில் சுப்மான் கில், 4வது போட்டியில் கேஎல் ராகுல் என நம்பர் 3இல் பல்வேறு காரணங்களால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. அங்கிருந்த நிலையான ரன்கள் வராதது விராட் கோலி உள்பட மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு பெரிய நெருக்கடியை அளித்திருக்கிறது.
நம்பர் 3இல் வாஷிங்டன் சுந்தர்
ஒருவேளை சுப்மான் கில் அடுத்த போட்டியில் இறங்காவிட்டால் நம்பர் 3இல் இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை முயற்சித்து பார்க்கலாம். அவர் ரஞ்சி கோப்பை தொடரில் 3வது வீரராக களமிறங்கி சமீபத்தில் சதம் அடித்ததை பார்க்க முடிந்தது. ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் அதிக பந்துகளை சந்திக்கிறார்.
நேற்று முடிந்த மெல்போர்ன் டெஸ்டில் கூட அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 207 பந்துகளை சந்திருந்திருந்தார். இதில் ஒரு இன்னிங்ஸில் அரைசதம், ஒரு இன்னிங்ஸில் நாட்-அவுட் என்பது வேறு கதை. அதிக பந்துகளை சந்திக்கும் திறனை அவர் பெற்றிருப்பதால் வாஷிங்டன் சுந்தர் நம்பர் 3இல் நிச்சயம் இறங்கலாம். ரோஹித் சர்மா நம்பர் 6இல் இறங்கலாம். மீண்டும் கில்லையோ, கேஎல் ராகுலையோ நம்பர் 3இல் முயற்சிப்பது நீண்ட காலத்திற்கு எவ்வித பயன் கிடைக்காது.
நிரந்தர நம்பர் 3... சாய் சுதர்சனே சரி...
அந்த வகையில், வருங்காலத்தில் நம்பர் 3 இடத்திற்கு மிகச்சரியான நபராக இருப்பவர் சாய் சுதர்சன். சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக கூட நம்பர் இல் இறங்கி சிறப்பாக விளையாடியிருந்தார். பெரும்பாலும் ஓப்பனிங்கில் இறங்கினாலும் கவுண்டி கிரிக்கெட், ரஞ்சி தொடர்களில் நல்ல டெஸ்ட் இன்னிங்ஸை விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் நிச்சயம் இவரை நம்பர் 3 இடத்திற்கு தயார் செய்ய வேண்டும். முதல் தர போட்டிகளில் 47 இன்னிங்ஸ்களில் 1948 ரன்களை 41.44 என்ற சராசரியில் அடித்துள்ளார். இதில் 7 சதங்களும், 5 அரைசதங்களும் அடக்கம்.
மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து உடனே தூக்க வேண்டிய வீரர்கள்... சிட்னியில் ஜெயிக்க ஒரே வழி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ