வினேஷ் போகத் தகுதி நீக்கம்... எந்த பதக்கமும் கிடையாது... காரணம் என்ன? - ஒலிம்பிக்கில் அதிர்ச்சி

Vinesh Phogat Disqualified: மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 7, 2024, 01:15 PM IST
  • வினேஷ் போகத்திற்கு எவ்வித பதக்கமும் வழங்கப்படாது.
  • இன்று அமெரிக்க வீராங்கனையுடன் இறுதிப்போட்டியில் மோத இருந்தார்.
  • வினேஷ் போகத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்... எந்த பதக்கமும் கிடையாது... காரணம் என்ன? - ஒலிம்பிக்கில் அதிர்ச்சி title=

Vinesh Phogat Disqualified From Paris Olympics: மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தற்போது ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் எடையால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவரால் விளையாட முடியாது எனவும் அவருக்கு எவ்வித பதக்கமும் கிடையாது என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதனால், மகளிர் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் மட்டும் வழங்கப்படும். வெள்ளிப் பதக்கம் வழங்கப்படாது. 

மகளிர் ஃபிரிஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப இன்று இறுதிப்போட்டி நடைபெற இருந்த நிலையில், வீராங்கனைகளுக்கான எடை பரிசோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

IOA கூறியது என்ன?

இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (IOA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. 

மேலும் படிக்க | இதுதான் எனது கடைசி ஒலிம்பிக் போட்டி - வினேஷ் போகத் சொன்ன முக்கிய தகவல்!

இரவு முழுவதும் குழுவின் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவர் (வினேஷ் போகத்) இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் எடையுடன் இருந்தார். இந்த நேரத்தில் வேறு கருத்துகள் எதுவும் இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி கவனம் செலுத்த விரும்புகிறது" என தெரிவித்துள்ளது. 

கடுமையாக முயற்சித்த வினேஷ் போகத்

முன்னதாக, நேற்று இரவில் வினேஷ் போகத் 2 கிலோ எடை அதிகரித்திருந்தாகவும், இதனால் இரவு முழுவதும் தூங்காமல் ஓட்டப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிளிங் என அனைத்தையும் செய்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற  அவரால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இருப்பினும் துரதிருஷ்டவசமாக அவரால் தகுதிபெற இயலாமல் போனது. 

இது அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் கடும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது எனலாம். இருப்பினும், 100 கிராம் மட்டுமே இறுதியில் அதிகமாக இருந்ததாகவும், அதனை குறைப்பதற்கு வினேஷ் போகத் கூடுதல் நேரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு அவர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்திய நேரப்படி இன்று இரவே இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. 

எந்த பதக்கமும் கிடையாது

நேற்று (ஆக. 6) அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்த அவர், இன்றைய போட்டிக்கு முன் எடுக்கப்பட்ட சோதனையில் எடை அதிகரித்துள்ளார். வீரர், வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இரண்டு நாள்களிலும் அதே அளவில் நீடிக்க வேண்டும். போட்டியின் விதிப்படி 50 கிலோ எடைப்பிரிவில் இந்த முறை தங்கப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் மட்டும்தான் வழங்கப்பட இருக்கிறது. போட்டி இன்று நடைபெறாமல் நேற்றே நடைபெற்றிருந்தால் வினேஷ் போகத் நிச்சயம் பதக்கம் வென்றிருப்பார்.

50 கிலோ எடைப்பிரிவில் தகுதிபெற இதுபோல் கடினமாக முயற்சிப்பது என்பது முதல்முறை அல்ல. அவர் வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில்தான் போட்டியிடுவார். பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிச் சுற்றுகளின் போது கூட அவர் இதேபோன்ற ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அங்கு அவர் சிறிய வித்தியாசத்தில் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்பை பெற்றார். 

வெறியுடன் விளையாடிய வினேஷ் போகத்

வினேஷ் போகத் இன்றைய இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் உடன் மோத இருந்தார். வினேஷ் போகத் இந்த அமெரிக்க வீராங்கனையை அதிக முறை வென்றிருப்பதால் தங்க பதக்கத்திற்கான வாய்ப்புகள் இந்தியாவுக்கு பிரகாசமாக இருந்தது. ஆனால், இந்த தகுதி நீக்கத்தால் இப்போது தங்கப் பதக்கம் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்டுக்கு வழங்கப்பட இருக்கிறது. 

வீழ்த்தவே முடியாது என கூறப்பட்ட உலகின் நம்பர் 1 மல்யுத்த வீராங்கனையான ஜப்பானின் யுய் சுசாகியை முதல் சுற்றிலேயே வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தார், வினேஷ் போகத். மனவலிமையின் மொத்த உருவமாக இருந்த வினேஷ் அந்த வெற்றியை அடைந்தார். அந்த வெற்றியை அவர் கதறி அழுதுபடி கொண்டாடினார். அதே வெறியுடன் உக்ரனை வீராங்கனையை காலிறுதியிலும், கியூப வீராங்கனையை அரையிறுதியிலும் வீழ்த்தினார் வினேஷ் போக்த். 

போற்றுதலுக்குரிய வினேஷ் போகத்

மேலும் இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் வினேஷ் போகத் பெற்றிருந்தார். தற்போது அவரின் அனைத்து கனவுகளும் சுக்குநூறாகி, அவர் வெறுங்கையுடன் நாடு திரும்ப உள்ளார். வெறுங்கையுடன் நாடு திரும்பினால் என்ன அவரின் மனவலிமையாலும் போராட்ட குணத்தாலும் எப்போதும் மக்களால் போற்றப்படுவார், அவர்களின் நினைவிலும் நிலைத்திருப்பார் எனலாம்.

மேலும் படிக்க | 4 முறை உலக சாம்பியன், ஒலிம்பிக் வின்னர் சுசாகியை வீழ்த்திய வினேஷ் போகத்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News