ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இலங்கை இன்று இரவு செல்கிறது. நாளை முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் நேபாளம் அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் தொடக்க போட்டியானது அந்நாட்டில் நடக்கிறது. அதற்கு அடுத்த போட்டிகள் எல்லாம் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இந்திய அணியானது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 2 ஆம் தேதி எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்குப் பிறகு உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செப்டம்பர் 3 ஆம் தேதி ஒருநாள் உலக கோப்பையில் விளையாடும் அணியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்க இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது. யாரேனும் காயமடைந்தால் அவர்களுக்கு மாற்றாக சில வீரர்கள் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் ஷிகர் தவானுக்குகான வாய்ப்பு என்பது முழுமையாக இல்லை என்றாகிவிட்டது. ஆனால் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது தான் பலருக்கும் இருக்கும் கேள்வியாக இருக்கிறது. அதேநேரத்தில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான வாய்ப்பில் கடும் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. அக்சர் படேல் அந்த இடத்தில் சாஹலுக்கு கடும்போட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் உலக கோப்பைக்கு சாஹலை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்குமா? என்பது இதுவரை புதிராக இருக்கிறது. அதேபோல் அஸ்வினுக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருப்பதால் பிசிசிஐ அறிவிப்பை ஆவலுடன் கிரிக்கெட் வீரர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா.