INDvsAUS: 3வது ஒருநாள் போட்டி; தொடரை வெல்லப்போவது யார்? சாதனைக்கு ரெடியாகும் இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2019, 03:44 PM IST
INDvsAUS: 3வது ஒருநாள் போட்டி; தொடரை வெல்லப்போவது யார்? சாதனைக்கு ரெடியாகும் இந்தியா title=

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி நடைப்பெற்றது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டி நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். 

இருஅணிகளும் சமநிலையில் இருப்பதால், நாளைய போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இரு அணிகளும் கடுமையான வலை பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணி டி20 தொடர் சமநிலையிலும், டெஸ்ட் தொடரை இழந்தும் உள்ளது. இதனால் நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என முனைப்பில் உள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரும் சவாலாக ஆஸ்திரேலியா அணி தனது செயல்பாடுகளை பலப்படுத்தும். 

அதேவேளையில், இரண்டாவது போட்டியில் கடினமான 299 ரன்கள் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதால் இந்திய அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. இந்திய அணியை பொருத்த வரை முதல் ஐந்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சை பொருத்த வரை புவனேஷ் வர்குமார் மற்றும் முகமது‌ஷமி தவிர மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் பந்து வீச்சில் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய்சங்கர் அறிமுகம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது போலவே, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த எதிர்பார்ப்பை விராட் தலைமையிலான இந்திய அணி பூர்த்தி செய்யும் என்றே தெரிகிறது.

Trending News