ஸ்டீவன் ஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய லாபஸ்சேக்னே பேட்டிங் செய்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகிறது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இத்தொடரின் இரண்டாவது போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பின்றி ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த போட்டியின் 4-வது நாள் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே சரிந்தார். சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் பேட்டிங் செய்தார்.
எனினும் ஐந்தாவது நாள் அவர் களம் இறங்கவில்லை. அவர் மூளையளர்ச்சியில் இருந்து மீளவில்லை, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம் என போட்டிக்கான டாக்டரும், ஆஸ்திரேலிய அணி டாக்டரும் பரிந்துரை செய்தனர்.
இதன்படி ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது மாற்று வீரரான மார்னஸ் லாபஸ்சேக்னே களம் இறங்கி அரைசதம் அடித்து போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்தார்.
இதன்மூலம் 142 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பேட்டிங் செய்த சாதனையை மார்னஸ் படைத்துள்ளார்.