ஆசிய கோப்பை குரூப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது...!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான குரூப் பிரிவு ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பும்ரா சேர்க்கப்பட்டனர்.
துவக்க வீரர்களான இமாம் உல்-ஹக், பஹார் ஜமானை ஆகியோரை உடனடியாக வெளியேற்றி புவனேஷ்வர் குமார் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாபர் அசாம், சோயிப் மாலிக்கும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு போட்டியாக ரன் கணக்கை தொடங்கினர். 4 வது ஓவரில் தொடங்கிய இவர்களுடைய கூட்டணி 21.2வது ஓவர் வரையில் நீடித்தது. இடைப்பட்ட ஓவர்களில் பாகிஸ்தானுக்கு நேர்த்தியான ரன் கணக்கை இருவரும் சேர்த்தனர். கூட்டணி வலுப்பெற்ற நிலையில் பாபர் அசாமை 47(62) ரன்களில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.
இதற்கிடையே பந்து வீசும்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ஹர்திக் பாண்டியா கீழே விழுந்தார். பின்னர் அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் நட்சத்திர ஆட்டக்காரர் சோயிப் மாலிக் 43(67) ரன்களில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து பாகிஸ்தானின் விக்கெட்டுகளை கேதர் ஜாதவ் வரிசையாக வெளியேற்றினார். அப்போது பாகிஸ்தான் அணி 33.4 வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்து திணறியது.
தனையடுத்து மோசமான நிலையை மேம்படுத்த பாகிஸ்தானின் பிற்பாதி ஆட்டக்காரர்கள் முயற்சி செய்தார்கள். இந்தியாவின் அபாரமான பந்துவீச்சுக்கு இடையே மெதுவாக ரன் சேர்த்து 150 ரன்களை கடந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது.
அதிகபட்சமாக அந்த அணியில் பாபர் ஆசம் 47 மற்றும் சோயப் மாலிக் 43 ரன்கள் அடித்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்குமார் மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பும்ரா 2 விகெகெட்டுக்களையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா, தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர். இருவருமே நல்ல தொடக்கம் கொடுத்தனர். 13.1 ஓவரில் ரோகித் சர்மா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து தவான் 46 ரன்கள் எடுத்த நிலையில் பஹீம் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுக்களை இழக்காமல் ரன்களை சேர்த்தது. இவர்கள் இருவரின் நிதானமான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
People celebrate in Delhi as India defeated Pakistan by 8 wickets in their match in #AsiaCup2018 today. #INDvsPAK pic.twitter.com/LFxp0nswfI
— ANI (@ANI) September 19, 2018
இதனால், இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.ராயுடு 31 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அஷ்ரப் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதற்கு முன்பு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியதில், கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது...!