சனியால் ஏற்படும் தோஷங்களில் விமோசனம் பெற வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்

நீதியின் கடவுளான சனி பகவான் கொடுக்கும் தொந்தரவுகள் மற்றும் சிக்கல்களால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், இந்த எளிய பரிகாரங்களை செய்து அதில் இருந்து விடுதலை பெறுங்கள். வாழ்க்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2023, 05:49 PM IST
  • சனி தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்
  • எல்லா தோஷங்களும் நீங்கிவிடும்
  • மகிழ்ச்சியும், செல்வமும் வீட்டிற்கு வரும்
சனியால் ஏற்படும் தோஷங்களில் விமோசனம் பெற வேண்டுமா? இதோ எளிய பரிகாரம் title=

ஒரு ராசியில் இரண்டரை வருட காலம் தங்கி பெயர்ச்சி ஆகும் இந்த சனி கிரகத்தால் மக்களுக்கு பேரதிர்ஷ்டங்களும், துரதிர்ஷ்டங்களும் வந்து சேர்கிறது. ‘சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை’ என்கிற ஜோதிட பழமொழி ஒன்று உண்டு. இவரின் அருளாசி கிடைத்தால் குப்பையில் இருப்பவரும் கோபுரத்தில் ஏறிவிடலாம்! இத்தகைய அருள் நிறைந்த சனி பெயர்ச்சியில் 12 ராசிக்காரர்களும் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய ஆன்மீக பரிகாரங்கள் என்னென்ன?

பொதுவாக சனி தோஷம் நீங்க சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட வேண்டும். இவர் ஸ்தோத்திர பிரியர் ஆவார். இவருடைய ஸ்தோத்திரங்களை உச்சரித்து மனதார வழிபடுபவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை கொடுப்பார். அவருடைய சன்னதியில் நல்லெண்ணெயில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து, எள்ளால் செய்த அன்னத்தை நைவேத்தியம் படைத்து சனி அஷ்டோத்திரம், சனி கவசம், சனி பகவான் மந்திரங்களை உச்சரித்து மனதார வழிபட வேண்டும். சனி தாக்கம் அதிகம் இருப்பவர்கள் எள் மூட்டை வைத்து தீபம் ஏற்றி சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சியால் உருவான அரிய ராஜ யோகம்... செல்வத்தை அளவில்லாமல் அள்ளப்போகும் இந்த 4 ராசிகள்!

ஏழை எளியவர்களுக்கு எள் அன்னம் படைத்து கருப்பு நிற வஸ்திரங்களை தானம் செய்ய வேண்டும். நீங்கள் தானம் செய்யும் பொழுது தட்சிணையாக ரூபாய் நோட்டை வைத்து தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சனி கிரகத்தால் வரக்கூடிய பாதிப்புகள் குறையும். பொதுவாக திருநள்ளாறு சனி பகவானின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு சென்று நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை முறையாக வழிபடுபவர்களுக்கு கடுமையான தோஷங்கள் எளிதாக நீங்குவதாக ஐதீகம் உண்டு. சனி பகவான் அங்கஹீனம் உடையவர் என்பதால் மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த அளவிற்கு நீங்கள் உங்களால் ஆன உதவிகளை செய்வது சிறப்பான பரிகாரமாக அமையும்.

ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு சாப்பிடுவது நன்மை தரும் மேலும் உளுந்து தானம் செய்து வருவதும், நவகிரக சன்னிதியை 9 முறை வலம் வருவதும், தகுந்த ஜோதிட ஆலோசனையின் படி நீலக்கல் அணிவதும் சிறப்பான பலன்களை தரும். பின் சனியின் தாக்கம் குறைய சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்ததும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.

அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும், சனி பிரதோஷங்களின் பொழுது சுத்தமான கறந்த பசும்பாலினை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து வருவதும் நற்பலன்களை அள்ளித் தரும். சிவபுராணம், பஞ்சாட்சரம் உச்சரித்து வாருங்கள். மேலும் விநாயகருக்கு தொடர் வழிபாடுகள் செய்வதும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, துளசி மாலை போன்றவற்றை சாற்றி 27 முறை சன்னதியை வலம் வந்து ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்வதும் தோஷங்கள் நீங்கும் எளிய பரிகாரங்களாக இருந்து வருகிறது.

சனி பகவானுடைய கடுமையான கெடு பலன்கள் குறைய கருப்பு உளுந்து தோல் உடன் கூடியதாக 108 என்கிற எண்ணிக்கையில் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு துணியில் கட்டி நீங்கள் படுக்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து படுத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து நீராடி சனி பகவான் சன்னதிக்கு சென்று 108 முறை வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் இதிலிருந்து ஒவ்வொரு உளுந்தை எடுத்து கீழே போட வேண்டும். இங்கனம் நீங்கள் கரு உளுந்து பரிகாரம் செய்து வர கடுமையான சனி தோஷங்கள் மறையும்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை... ராஜவாழ்க்கை வாழ்வார்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News