சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடை நீக்க மழையால் மட்டுமே முடியும் என டைட்டானிக் பட கதாநாயகன் லியானார்டோ டி காப்ரியோ கருத்து!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டைட்டானிக் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ இன்ஸ்டாகிராமில் சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தென்னகத்து நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு தரும் தண்ணீருக்காக வரிசையில் மணி கணக்காக காத்திருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர் என அவர் பதிவிட்டுள்ளார்.