மைசூரு அரண்மனையில் தசாரா கொண்டாட்டத்துக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் திடீரென நேற்றிரவு மோதிக் கொண்டன. உணவுக்காக கஞ்சன் மற்றும் தனஞ்ஜெயா என்ற இரண்டு யானைகளும் அழைத்து வரப்பட்டபோது திடீரென மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கஞ்சன் யானையின் பாகன் கீழே விழுந்துவிட்ட நிலையில், தனஞ்ஜெயா யானையின் மேல் பாகன் அமர்ந்திருந்தார். அவரால் கோபமான தனஞ்ஜெயா யானையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் கஞ்சன் யானை வேறுபக்கம் ஓடி சென்றபோது அதனை பின்தொடர்ந்து தனஞ்ஜெயா யானை துரத்திச் சென்று தாக்கியது. இதனைப் பார்த்த மைசூரு அரண்மனைக்குள் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
ஒரு கட்டத்தில் கஞ்சன் யானை வேறு திசையில் சென்றதும், அதாவது மெயின்ரோடு பகுதிக்கு ஓடிச் சென்றதும் ஆக்ரோஷமாக இருந்த தனஞ்ஜெயா யானையை பாகன் கட்டுப்படுத்தி வேறு பக்கம் அழைத்து வந்தார். இருப்பினும் அவரும் ஒருவிதமான பதற்றத்துடனேயே யானையின் மீது அமர்ந்திருந்தார். நல்ல வேளையாக பாகன்களுக்கும், அங்கிருந்த பொதுமக்களுக்கும் ஏதும் ஆகவில்லை. காளை யானைகளை இரண்டையும் ஒரே நேரத்தில் உணவுக்காக அழைத்து வந்ததே இரண்டு யானைகளின் மோதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. வழக்கமாக இரண்டு யானைகளையும் வெவ்வேறு நேரங்களில் தான் உணவுக்கு அழைத்து வருவார்களாம். நேற்றிரவு ஒரே நேரத்தில் வரவும் இரண்டு யானைகளும் மோதிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி பிரபுகவுடா பேசும்போது, இரண்டு யானைகளையும் ஒரே நேரத்தில் பாகன்கள் உணவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இதனால் தான் இந்த மோதல் நடந்திருக்கிறது. தனஞ்ஜெயா யானை தான் முதலில் கஞ்சனை தாக்கியது. அப்போது கஞ்சன் முதுகில் அமர்ந்திருந்த பாகன் கீழே விழுந்திருக்கிறார். அதனால் கஞ்சன் யானை வேறு பகுதிக்கு ஓடத் தொடங்கியது. அப்போதும் தனஞ்ஜெயா யானை விடாமல் கஞ்சனை துரத்திச் சென்று தாக்கியது. கோவில் வாசலில் இருந்து கஞ்சன் மெயின் ரோடு பகுதிக்கு ஓடிவிட்டார்.
தனஞ்ஜெயா யானை மீது அமர்ந்திருந்த பாகன் ஒருவழியாக அதனை எப்படியோ கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். சோமேஸ்வரா கோவில் வாசலில் இருந்து வெளியே கஞ்சன் ஓடிவிட்டது. இரவு 8 மணியளவில் ஜெயமார்த்தாண்ட கேட் அருகில் கஞ்சன் யானை நின்று கொண்டது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. யானைகளுக்கு இருவேறு நேரங்களில் உணவுக்கு அழைத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இப்போது யானைகள் மோதிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ