மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பையும் கேவலப்படுத்துவதா?: நடிகர் பிரகாஷ்ராஜ்!

மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பை கேவலப்படுத்துவதா?: மத்திய பாஜக அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : Dec 26, 2017, 12:04 PM IST
மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பையும் கேவலப்படுத்துவதா?: நடிகர் பிரகாஷ்ராஜ்! title=

நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு #JustAsking என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதையடுத்து, பா.ஜ.க அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே, மதச்சார்பற்றவர்களுக்கு பெற்றோர் யார் என்று தெரியாது எனவும், அவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது என்றும் பேசியதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் சில கேள்விகளை தனது ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.

இதுபற்றி, பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு இவ்வளவு கீழ்த்தரமாக ஒருவரின் பிறப்பை எப்படி விமர்சனம் செய்கிறீர்கள்? மதச்சார்பற்றவர்களின் ரத்தத்தையும், பிறப்பையும் கேவலமாக விமர்சிக்கிறீர்கள். 

ஒரு மனிதரின் ரத்தத்தை வைத்து ஜாதி மற்றும் மதத்தை முடிவு செய்ய முடியாது. மதச்சார்பின்மை என்பது வேற்று மதங்களை மதிப்பது. இப்படிப்பட்ட கேவலமான அரசியல் செய்வதிலிருந்து எப்போது விடுபடுவீர்கள்? என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே பேசும்போது, ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என்றோ, ஒரு கிருஸ்துவர் தன்னை கிருஸ்துவர் என்றோ, ஒரு பிராமணர் தன்னை பிராமணர் என்றோ, ஒரு லிங்காயத் தன்னை ஒரு லிங்காயத் என்றோ பெருமையாக கூறிக்கொள்வாரே ஆனால் எனக்கு மகிழ்ச்சி. 

ஏனென்றால் அவர்களில் ரத்தம் என்ன என்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களை எப்படி அழைப்பது என்று சொல்ல தெரியவில்லை. என்ன ரத்தம் என்று தெரியாமல் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. 

அவர்களுக்கு தங்கள் பெற்றோர் யார் என்று தெரியாது. மக்கள் தங்களின் ஜாதி-மத அடையாளத்தை கண்டுகொள்ள வேண்டும். நீங்கள் யார் என்று சொன்னால் அதற்கு நான் தலைவணங்குகிறேன் என்று பேசினார்.

அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவின் இந்தப் பேச்சை, நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார். அவர் தனது டிரேட்மார்க் ஹேஷ்டேக்கில் #JustAsking மூலம் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

 

Trending News