சென்ற வெள்ளி கிழமை வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்ப்பு பெற்று நல்ல வசூல் அள்ளி வருகிறது.
ஒரு பக்கம் செம ரெஸ்பான்ஸ் பெற்று வரும் இப்படத்திற்கு மறுபக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை கடுமையாக விமர்சித்ள்ளார். நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது:-
சமீபகாலமாக, சில தரம்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றன. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள்.
தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை. முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம், நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இவர்களுக்குத் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கிறது"
ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே... நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல... அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள்.
இதுபோன்ற படங்கள் சென்சார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சென்சாரையே சென்சார் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
என பாரதிராஜா கூறியுள்ளார்.