Ravichandran Ashwin News: இந்திய அணியில் தனக்கு பின் தனது இடத்தை இந்த வீரர் நிரப்புவார் என்ற ரீதியில், ரவிச்சந்திரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீரர் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
India National Cricket Team: ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் (டிச. 18) அறிவித்தார். தொடர்ந்து, நேற்று அவர் சென்னை வந்தடைந்தார். அவரின் திடீர் ஓய்வு அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) டி20, ஓடிஐ, டெஸ்ட் என சர்வதேச அரங்கில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border - Gavaskar Trophy) தொடரின் கடைசி நாளான நேற்று முன்தினம் அறிவித்த அஸ்வின் உடனே தாயகம் திரும்பினார்.
அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இருப்பினும் அஸ்வின் இது தனது தனிப்பட்ட முடிவு என விளக்கம் அளித்து வருகிறார்.
நேற்று அஸ்வினின் தந்தை ஊடகங்களிடம் பேசியபோது தனது மகனை தொடர்ந்து அவமானப்படுத்தினர் என்றும் அதனை எத்தனை நாள்கள் பொறுத்துக்கொள்ள முடியும் எனவும் பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு அஸ்வின், "என் அப்பா மீடியாவில் பேச தேர்ச்சி பெற்றவர் இல்லை. டேய் அப்பா என்னடா இதெல்லாம்...0 வீரர்கள் ஓய்வுக்கு பின் அவர்களது அப்பாக்கள் பேசுவதை போல் நீங்களும் பின்பற்றுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அவரை மன்னித்து, அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என நகைச்சுவையாக அதற்கு விளக்கமளித்திருந்தார்.
தொடர்ந்து, அஸ்வினுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. இதற்கு அவரும் பதில் அளித்து நன்றியும் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், அவருக்கு வாஷிங்டன் சுந்தரும் (Washington Sundar) வாழ்த்து தெரிவித்திருந்தார். தங்களுடன் விளையாடியது தனக்கு கிடைத்த பெரும்பேறு எனவும் வாஷிங்டன் சுந்தர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அதற்கு பதில் அளித்த அஸ்வின்,"துப்பாக்கிய பிடிங்க வாஷி... அன்று இரவு நடந்த கூடுகையில் நீ பேசிய 2 நிமிடங்கள் மிகவும் சிறப்பான ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.
The Goat படத்தில் சிவகார்த்திகேயனிடம் கோலிவுட்டையே ஒப்படைப்பது போன்று விஜய்,'துப்பாக்கிய பிடிங்க சிவா' என வசனம் பேசியிருப்பார். அதையே அஸ்வினும், தனக்கு பின் இந்திய அணியின் (Team India) சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்தான் என்ற வகையில் கமெண்ட் செய்துள்ளார்.