Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து பல மாதங்களாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இருப்பினும் முதல்வரின் அமெரிக்க பயணம் உள்ளிட்ட சில காரணங்களால் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில், தற்போது அமைச்சரவை மாற்றத்திற்கான காலம் கனிந்துவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நாளை ஏற்பட உள்ள அமைச்சரவை மாற்றம் குறித்து விரிவாக இங்கு காணலாம்.
புலி வருது, புலி வருது என்ற கதையை போன்று தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து பேசப்பட்ட வந்ததுதான் அமைச்சரவை மாற்றம். ஒருவழியாக நாளை அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் (Tamil Nadu Cabinet Changes) நாளை (செப். 29) பிற்பகல் 3.30 மணிக்கு அரங்கேற இருப்பதாக கூறப்படுகிறது. அக். 3ஆம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என உறுதியாக கூறப்படுகிறது. நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில், மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருப்பதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி (Senthil Balaji) சிறையில் இருந்து வெளியாவதற்காக தான் அமைச்சரவை மாற்றமே தள்ளிப்போனது என கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் மீண்டும் அமைச்சராவதில் நீதிமன்றம் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காததால் மீண்டும் அவர் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையை பெற உள்ளார் என கூறப்படுகிறது.
சுற்றுலா துறை அல்லது கைத்தறி துறை அமைச்சராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் (Panamarathupatty Rajendran) பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சுற்றுலா துறை அமைச்சராக ராமசந்திரன் இருக்கிறார். கைத்தறி துறையை ஆர். காந்தி தன்வசம் வைத்துள்ளார்.
மேலும் பால்வளத்துறை அமைச்சராக மீண்டும் ஆவடி நாசர் (Avadi SM Nasar) பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு மே மாதம் ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது முதல் பால்வளத்துறையை மனோ தங்கராஜ் கவனித்து வருகிறார்.
உயர்கல்வி துறை அமைச்சராக கோவி. செழியன் (Kovi Chezhiyan) பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பொன்முடி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரின் இலாக்காக்கள் மாற்றமடைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என முதல்வர் முன்னர் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.