Fengal Cyclone Relief Amount Announcement: அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அரிவித்துள்ளர். இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) தலைமையில் இன்று நடைபெற்றது. ரேசன் அட்டைத்தாரர்களுக்கு மட்டுமின்றி அதே நேரத்தில் வீடு மற்றும் குடிசைகள் சேதம், பயிர்கள் சேதம், கால்நடைகள் இழப்பு ஆகியவற்றுக்கும நிவாரணம் தமிழ்நாடு அரசால் (Tamil Nadu Government) அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரண அறிவிப்புகளையும் இங்கு ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கப்படும்.
மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 ஆக வழங்கப்படும்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 ஆக வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும். கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை (Ration Card) அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.