Protein Rich Vegetarian Foods: உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உடல் பருமன் குறைய புரதம் மிக அவசியம். வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும் புரதச் சத்து தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தி திசுக்களை சரிசெய்கிறது. மேலும், எடை இழப்புக்கு புரதம் தேவைப்படுகிறது.
உணவில் புரதம் சேர்க்க, பெரும்பாலும் முட்டை அல்லது இறைச்சி சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், பல சைவ உணவுகளும் புரத சத்து நிறைந்தவை உடலுக்கு போதுமான அளவு புரதத்தை பெற நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டிய புரத உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
புரோட்டீன் என்னும் புரத சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. காலை நேர உணவு, இரவு நேர உணவு மற்றும் சிற்றுண்டிகள் ஆகிய அனைத்திலும் புரதம் நிறைந்த உணவுகளை, சேர்க்கும் போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வியக்கத் தக்க பலன்களை கொடுக்கும். இந்நிலையில், சைவ உனவு பிரியர்களுக்கான புரதம் நிறைந்த சிறந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம்
சோயா புரத சத்து நிறைந்த சிறந்த சைவ உணவு. 100 கிராம் சோயாவில் 36 கிராம் புரதம் உள்ளது.மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. புரதம் மட்டுமல்லாது, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்களும் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
கொண்டைக்கடலை - வெள்ளை கொண்டைக்கடலை புரதத்தின் நல்ல மூலமாகும். 100 கிராம் கொண்டைக்கடலை சாப்பிட்டால், 19 கிராம் புரதம் கிடைக்கும். மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இவற்றில், மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமங்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
குயினோவா புரதத்தின் முழுமையான ஆதாரங்கள் பசையம் இல்லாத தானியமான, குயினோவாவில் ஒரு நாளைக்கு தேவையான புரதத்தை அளிக்கும். 100 கிராம் குயினோவாவில் 14 கிராம் புரதம் உள்ளது. குயினோவாவில் புரத சத்து தவிர, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுஉள்ளன.
பன்னீர் என்னும் பாலாடைக்கட்டிகளில் புரதம் அதிகம். அதே சமயம் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு. 100 கிராம் பனீர் 18 கிராம் புரதத்தை வழங்குகிறது.கூடுதலாக, இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12 உள்ளது. ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
பச்சைப் பட்டாணி புரத சத்து நிறைந்த சிறந்த உணவுகளில் முக்கியமானது. 100 கிராம் பட்டாணியில் இருந்து உடலுக்கு 5 கிராம் புரதம் கிடைக்கிறது. இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும், ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லவும் இது தேவைப்படுகிறது.
காளான் அதிக அளவு புரதம் கொண்ட காய்கறி. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. தசை வலிமை மற்றும் ஆரோக்கியத்துடன், தசைகளை சீர் செய்யவும் காளான் உதவுகிறது. காளானில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் காளான உதவுகிறது.
ப்ரோக்கோலி: புரதம் நிறைந்துள்ள காய்கறி. இதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே மற்றும் ஃபோலேட் உள்ளது. ப்ரோக்கோலி தசைகளை வலுவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் சில வகையான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகிறது
வாதுமை பருப்பு: மிகச் சிறந்த உலர் பழங்களில் ஒன்றான வால்நட் என்னும் வாதுமை பருப்பு ஒரு சூப்பர்ஃபுட் என அழைக்கப்படுகிறது. 100 கிராம் வால்நட் சாப்பிடுவதால், 15 முதல் 20 கிராம் புரதம் கிடைக்கிறது. மிக சிறந்த உலர்பழமான இது, மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.