Health Benefits Of Cashews: முந்திரி பருப்பு விலை அதிகம் என்றாலும் அதில் ஊட்டச்சத்துக்களும் அதிகம். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 உள்ளன. துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் நிறைந்துள்ளன. முந்திரி ருசியாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு பல வழிகளிலும் நன்மைகளை அளிக்கிறது.
உலர் பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான். வாதுமை பருப்பு, பாதாம் பருப்பு ஆகியவை உடலுக்குமிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று முந்திரி பருப்பும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
முந்திரிப் பருப்பு சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களில் அடங்கும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை மூளை சிறப்பாக இயங்க உதவுவது முதல், இதய அரோக்கியம், எமும்புகள் ஆரோக்கியம் என பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
மூளை ஆரோக்கியம்: ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள முந்திரி பருப்பும், மூளை சிறப்பாக இயங்க உதவுகிறது. மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு முந்திரி பருப்பை உட்கொள்ள வேண்டும். முந்திரியில் உள்ள வைட்டமின் பி நினைவாற்றலைக் கூர்மையாக்கும்.
இதய ஆரோக்கியம்: புரதம், நார்சத்து நிறைந்த முந்திரி பருப்பில் இதயத்திற்கு ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
எலும்பு ஆரோக்கியம்: முந்திரி எலும்புகளை வலுப்படுத்தும் உலர் பழங்களில் முந்திரியும் அடங்கும். இந்த உலர் பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை எலும்புகளை பலப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கள்.
இளமையை காக்க: முந்திரி பருப்பை உட்கொள்வதால் சருமத்தின் நிறம் மேம்படும். புரதச்சத்து நிறைந்த முந்திரி முடி வளர்ச்சியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த முந்திரியை தினமும் உட்கொண்டால், அது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியம்: முந்திரி பருப்பை உட்கொள்வதால் கண் ஆரோக்கியமும் மேம்படும். இதில் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை கண் பார்வை கூர்மையை மேம்படுத்துவதிலும், கண் பிரச்சனைகள் பலவற்றை தடுப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பக்க விளைவுகள்: அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சு என்பார்கள். முந்திரியில் ட்ரைகிளிசரைடு என்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே அளவிற்கு அதிகமாக இதனை உட்கொள்வதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதோடு, முந்திரியில் அதிக ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருப்பதால், அளவிற்கு அதிகமானால், சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.