Tamil Nadu Lokshaba Election Results: பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சிஆலோசனை மேற்கொண்டுள்ளது
தமிழ்நாட்டில் பாஜக தனக்கென ஒரு மக்களவைத் தொகுதியையாவது வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஏறக்குறைய முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தத் தேர்தலில் தமிழகத்தின் முக்கிய சில வேட்பாளர்களின் முயற்சிகளும், அவற்றின் முடிவுகளையும் பார்க்கலாம்
இதுவரை தமிழகத்தில் ஒரு எம்.பி கூட இல்லாத நிலையில், பாஜக தனக்கென ஒரு தொகுதியையாவது கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. தற்போது, 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் ஒரு தொகுதியில் கூட பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை...
இந்தியா கூட்டணியை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சி பத்தாண்டுகளாக ஆட்சியை பறிகொடுத்திருந்த நிலையில், தற்போது ஆட்சி அமைப்பது கடினம் என்றாலும், எதிர்பார்த்ததைவிட, கருத்துக்கணிப்புகளைவிட மிக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்ற முழக்கத்துடன் களம் கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஏறக்குறைய தனது கூட்டணி கட்சிகளுடன் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியடையும் நிலையில் உள்ளது
பாஜகாவுக்கு தமிழகத்தில் ஒரு இடத்தை உருவாக்க முழு முயற்சிகளையும் மேற்கொண்ட கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது தோல்வி, பாஜகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், ஊடகங்கள் மிகைப்படுத்தி சொல்கின்றன என்ற குற்றச்சாட்டை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து சொல்லிவந்தது குறிப்பிடத்தக்கது
நீயா நானா என்ற தேர்தல் போட்டாபோட்டியில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் ஒரு வேட்பாளர்கூட தமிழகத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இது வாக்கு எண்ணிக்கை தொடங்கி 13 மணி நேரத்திற்கு பிறகும் உள்ள நிலை என்பதால், இதில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இருக்காது.
ஆளுநராக இருந்த திருமதி தமிழிசை செளந்தர்ராஜனை, வேட்பாளராக களம் இறக்கியது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை, தமிழகத்தில் மலரவில்லை
திடீரென தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக, தனது சமத்துவ மக்கள் கட்சியை (AISMK) பாஜகவுடன் இணைத்து, தனது மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமாரை வேட்பாளராக களம் இறக்கினார் சரத்குமார். மனைவியின் வெற்றிக்காக, அங்கபிரதட்சணம் செய்தாலும், வெற்றி எண்ணிக்கைக்கு அருகில் ராதிகாவால் வரமுடியவில்லை.
தேமுதிகவின் தலைவர் மறைந்த பிரபல நடிகர் விஜயகாந்தின் மகன், அதிமுகவின் தோழமையுடன் களம் இறங்கினார். மகன் விஜய பிரபாகனின் வெற்றிக்காக தாய் இருந்த தவமும் மகனுக்கு பயனளிக்கவில்லை.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், இன்னாள் சுயேச்சை வேட்பாளர் திரு ஓ.பன்னீர்செல்வம் தனது வெற்றிக்காக அரும்பாடு பட்டாலும், பட்டபாடு வீணானது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியின் பொறுப்புகளை திறம்பட நிர்வாகம் செய்து வருவதாக சொல்லிக் கொண்டாலும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வியூகங்கள் இந்தத் தேர்தலில் எடுபடவில்லை
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. தற்போதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை