பண்டிகைக் காலத்தில் தங்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் சர்க்கரை நோயாளிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியத்துக்கு கேடு வராத வகையிலும் இருக்க இந்த 5 வழிகளை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றலாம்.
உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பண்டிகைக் காலங்களிலும் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உணவில் கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெள்ளை ரொட்டி, நூடுல்ஸ் மற்றும் வெள்ளை அரிசி போன்ற பிராசஸ் செய்யப்பட்ட தானிய தயாரிப்புகளை தவிர்க்கவும். ஏனெனில் அவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
நீரிழிவு நோய் 'நல்ல' கொழுப்பின் அளவைக் குறைத்து ட்ரைகிளிசரைடு மற்றும் 'கெட்ட' கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் நீரிழிவு டிஸ்லிபிடெமியாவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தமனிகள் அடைப்பு மற்றும் கரோனரி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க ஃபாஸ்ட் புட், பர்கர், பீட்சா, பொரித்த தின்பண்டங்கள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவைக் கட்டுக்குள் வைத்திருப்பதுடன், தவறாமல் மருந்து உட்கொள்ள மறக்காதீர்கள். நீங்கள் சரியான நேரத்தில் மருந்துகளை சாப்பிட மறந்துவிட்டால் அல்லது பண்டிகை மகிழ்ச்சியில் அலட்சியமாக இருந்துவிட்டால், அது உங்கள் நோயை அதிகரிக்கும். அதன் பிறகு நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட, உணவு, உறக்கம் போன்றவற்றுடன், தினமும் 1 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய்க்கு உடல் பருமன் ஒரு காரணியாகும். இதனுடன், இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கிறது, இதய நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் உயர் இரத்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை நோயின் ஆபத்தில் உள்ளனர். இந்த இரண்டு நிலைகளும் நோயாளிக்கு மிகவும் ஆபத்தானவை. எனவே உங்கள் சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு குளுக்கோமீட்டரை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன், HbA1C பரிசோதனையை வருடத்திற்கு இரண்டு முறை செய்யவும். இந்தப் பரிசோதனையின் மூலம், உங்கள் சர்க்கரையின் நிலை என்ன, அதை எப்படிச் சரியாகக் கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவரும்.