ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் என்பது உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழிகளில் ஒன்றாகும்.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. இந்த கால்வாயில் ஏற்படும் போக்குவரத்து தடைபட்டால், ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும்.
உலக வர்த்தகத்தில் சுமார் 10% வர்த்தக போக்குவரத்து நடைபெறும் இந்த கால்வாயில் மாட்டிக் கொண்டுள்ள கப்பலால், இதனை கடக்க காத்திருக்கும் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான கப்பலான எவர் கிரீன், சீனாவிலிருந்து (China) நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி புறப்பட்டது. மலேசியா வழியாக வந்த எவர் கிரீன் கப்பல் 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23-ம் தேதி திடீரென ஆவேசத்துடன் வீசிய சூறாவளி காற்றினால், கட்டுப்பாட்டை இழந்த கப்பல் காலவாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது.
இது உலக வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு கடற்கரையில் ஆசியாவிலிருந்து அதிகமான ஏற்றுமதிகளைப் பெறும் அமெரிக்காவில் இதன் நேரடி தாக்கம் குறைவாக இருக்கும் என்றாலும், இந்த மாட்டிக் கொண்டுள்ள கப்பலை அகற்ற இன்னும் சில வாரங்கள் ஆனால், பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.