LIC Bhima Sakhi Yojana Scheme: எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தையும் உருவாக்குகிறது.
பீமா சகி யோஜனா திட்டம் நாளை தொடங்கிவைக்கப்படுகிறது. முதலில் ஹரியானாவில் தொடங்கும் இந்த திட்டம் அதன்பின் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் நாளை (டிச. 8) தொடங்கிவைக்கிறார்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமரின் முன்னெடுப்பில் பெண்களுக்கான வளர்ச்சியும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹரியானா முதலமைச்சர் நயப் சிங் சைனி உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
அந்த வகையில், எல்ஐசி நிறுவனத்தின் இந்த பீமா சகி யோஜனா என்ற திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம். இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு காப்பீடு முகவர் பணி வழங்கப்படுகிறது.
இதில் அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய சாராம்ச கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களுக்கு நிதி ஆதரத்தை உருவாக்குவதும்தான்.
அந்த வகையில், முதல் ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் முகவர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கப்படுகிறது. இது அடுத்தாண்டு சம்பளம் மாதம் ரூ.6,000 ஆக குறைக்கப்படும் எனவும் அதற்கு அடுத்து மூன்றாமாண்டில் மாதம் ரூ.5,000 ஆகவும் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதைத் தவிர்த்து அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.2,100 வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தால் அவர்களுக்கு கூடுதல் கமிஷனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பெண்களுக்கு காப்பீடு முகவர் பணி வழங்கப்பட இருக்கிறது. இது வருங்காலத்தில் ரூ.50 ஆயிரம் பெண்கள் வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலில் ஹரியானாவில் தொடங்கும் இந்த திட்டம் பின்னர் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீமா சகி யோஜனா திட்டத்தின்கீழ் நீங்கள் விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 50 ஆக இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.